Published : 13 Feb 2015 09:43 AM
Last Updated : 13 Feb 2015 09:43 AM

சிங்கள சகோதரர்களின் மனசாட்சிக்கு ஒரு விண்ணப்பம்!

இலங்கைத் தமிழர் பிரச்சினையைச் சர்வதேச விவாதமாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறார் அந்நாட்டின் வடக்கு மாகாண முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன். இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் இனப் படுகொலைக்குக் காரணமாக இருந்ததுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் அவர் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கையின் அனைத்துச் சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அடுத்தடுத்து வலியுறுத்திவரும் இலங்கை அரசு, அதற்கான நடவடிக்கைகளை உளப்பூர்வமாக இதுவரை எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். 1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டு, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரமாகத் தொடங்கப்பட்டது. இறுதியாக, முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி அடைக்கலம் புகுந்த தமிழர்களில் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்களே மதிப்பிட்டுள்ளனர். இப்போதும் இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து ராணுவம் விலக்கப்படவில்லை. தமிழர்கள் முழு அளவில் அவர்களுடைய முந்தைய வசிப்பிடங்களில் குடியமர்த்தப்படவில்லை. தமிழர்களின் பறிக்கப்பட்ட நிலங்களும் இதர சொத்துகளும் அவர்களிடத்தில் முழுமையாகத் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அயல்வாழ் தமிழர்கள் தாயகம் திரும்பினால் அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான நிச்சயங்கள் ஏதும் இல்லை. போர் படிப்பினை மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கான குழுவை நியமித்த பிறகும்கூட, நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். இப்படி 1956 முதலாக தமிழர்களை இன அடிப்படையில் ஒடுக்க இலங்கை அரசு எடுத்துவரும் குடிமைச்சமூக - ராணுவ நடவடிக்கைகளையும் சிங்கள, ராணுவமயமாக்கல் செயல்திட்டங்களையுமே முன்வைத்துப் பேசுகிறது இந்த 11 பக்க அறிக்கை. அதன் அடிப்படையில் நியாயம் கேட்கிறது.

இலங்கையில் இப்போதுதான் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் சூழலில், விக்னேஸ்வரனின் இந்த அறிக்கை, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், இலங்கை அரசு இந்த விவகாரத்தை அணுகும் திசை கிட்டத்தட்டத் தெளிவாகிவிட்டது. சுகாதார அமைச்சரும் இலங்கை அமைச்சரவையின் ஊடகத் தொடர்பாளருமான ராஜித சேனரத்ன “இந்தத் தீர்மானம், வடக்கு மாகாண சபை கடுமையான நிலையை எடுத்திருப்பதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். மனித உரிமை மீறல்கள்குறித்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட - உள்நாட்டு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் சிரிசேனா வாக்குறுதி அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், “ போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாகாண சபையின் கவலை நியாயமானது. ஆனால், அதை இனப் படுகொலை என்று அழைத்துவிட முடியாது” என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே, “இது தேச விரோதத் தீர்மானம். வடக்கு மாகாண சபையைக் கலைத்துவிட்டு, அதன் உறுப்பினர்களைக் கைது செய்ய வேண்டும்” என்று சில சிங்கள அடிப்படைவாதிகள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்திய அரசு இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தரும் சமிக்ஞைகள் தென்படவில்லை. சர்வதேசச் சமூகமும் அமைதி காக்கிறது. இலங்கை நிலவரத்தையும் விக்னேஸ்வரனையும் நெருக்கமாகக் கவனித்து வருபவர்களுக்கு, ஒரு விஷயம் புரியும்: எப்படியும் இது அவசரத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட கோலம் அல்ல. தம் சொந்த மக்கள் பெரும் தேவையோடு ஒவ்வொரு நாளும் அணுகும் சூழலில், ஒருவர் எந்த அதிகாரமும் இல்லாத பதவியில் உட்கார்ந்துகொண்டு வெறுங்கையை விரித்துக்காட்ட எத்தனை நாட்கள் முடியும்? வடக்கு மாகாண சபை நிர்வாகிகளின் நிலை இதுதான். ஆட்சி மாறியது என்னவோ உண்மை; அரசின் அணுகுமுறை மாறவில்லையே. குறைந்தது ராணுவமயமாக்கலிலிருந்து அவர்களை விடுவிக்கும் நடவடிக்கையைக்கூடப் புதிய அரசு எடுக்கவில்லையே?

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் - சட்ட நுணுக்கங்களை யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவர் அவர். 2014 ஜனவரியில், இப்படியொரு தீர்மானத்தை வரைவு வாசகமாகத் தயாரிக்கப்பட்டபோது, “அறிக்கையில் ‘இனப் படுகொலை’என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்” என்று கூறிய விக்னேஸ்வரன்தான், இன்றைக்கு அதே வார்த்தைகளைச் சேர்த்துத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்றால், எந்த அளவுக்கு அவர் மனம் நொந்திருப்பார்; விரக்திக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகியிருப்பார் என்பதை நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. சொல்லொணா வலியில் ஒருவர் துடிக்கும்போது, நாம் கவனம் கொடுக்க வேண்டியது அவர் என்ன வார்த்தையைப் பயன்படுத்துகிறார், எப்படி அழைக்கிறார் என்பதற்கு அல்ல; அவருடைய வலிக்குக் காரணம் என்ன; நாம் அவருடைய துயரத்தை எப்படித் தீர்க்க முடியும் எனும் கவனமே நம்முடைய அக்கறையை உணர்த்த முடியும். வலியைப் பற்றி புத்தரைப் படிப்பவர்களுக்கு வெளியிலிருந்தும் போதனைகள் வேண்டுமா, என்ன? “இனப் படுகொலையைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு மட்டுமல்ல; இலங்கையில் உள்ள சிங்கள சகோதர, சகோதரிகளுக்கும் சேர்த்து விடப்பட்ட வேண்டுகோள்தான்” என்று கூறியிருக்கிறார் விக்னேஸ்வரன். இந்த அறிக்கையை பெரும்பான்மைச் சிங்களச் சமூகம் அப்படி அணுகினால், இந்தப் பிரச்சினை தீருவதோடு அல்லாமல், இலங்கையின் எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும்.

இலங்கைப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள் அந்தத் தீவுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால், வீட்டுக்குள்ளிருக்கும் சக மனிதரின் வலியும் துயரங்களும் அலறல்களும் ஒரு மனிதருக்குக் கேட்காவிட்டால், உயிர் உதவிக்கு வெளியிலிருந்து ஆள் அழைப்பதை எப்படித் தவறாகக் கொள்ள முடியும்? இலங்கை அரசும் பெரும்பான்மை சிங்களச் சமூகமும் தம் சகோதரர்கள் சுமக்கும் பொறுக்க முடியா வலியை உணர வேண்டும்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x