

இந்தியாவின் முன்னணித் தொலைத்தகவல் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தம்முடைய வாடிக்கையாளர்களிடமிருந்து ‘ஸ்கைப்’ பயன்பாட்டுக்காகக் கட்டணம் பெறுவது என்று கடந்த ஆண்டின் இறுதியில் முடிவுசெய்தபோது, பெருங்கூச்சல் எழுந்தது. ‘எல்லாத் தகவல் பரிமாற்றங்களும் சமமாகத்தான் நடத்தப்பட வேண்டும், பாரபட்சம் கூடாது’ என்ற கொள்கைக்கு முரணாக, இணையதள தகவல் பரிமாற்றத்தையே பாதிக்கும் விதத்தில் அந்த முடிவு இருந்தது என்பதற் காக ஏர்டெல்லின் முயற்சி கண்டிக்கப்பட்டது. இதை ‘இணைய நடுநிலை’ என்கிறார்கள். பிறகு, அந்நிறுவனம் தனது முடிவைத் திரும்பப் பெற்றது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) இதில் ஆலோசனை நடத்தி விளக்கம் தரும் வரை ‘ஸ்கைப்’ பயன் பாட்டுக்குக் கட்டணம் வசூலிப்பதில்லை என்ற முடிவை ஏர்டெல் எடுத்தது. டிராயின் விளக்க அறிக்கை இன்னும் வரவில்லை.
வேறொரு விஷயத்தைப் பொறுத்தவரை இதற்கு முற்றிலும் முரணான ஒரு மவுனம் நிலவுகிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தகவல்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் ‘இன்டெர்நெட்.ஆர்க்’ என்ற சேவையை அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கும்போது, ஏன் யாரும் முனகக்கூடவில்லை? காரணம் நமக்குப் புரியாமல் இல்லை. ஏர்டெல் இணையதளத்தைப் போல அல்லாமல், ரிலையன்ஸ் - ஃபேஸ்புக்கின் இந்த ‘இன்டெர்நெட்.ஆர்க்’ எனும் சேவை குறிப்பிட்ட சில இணையதளங்களை மட்டும் இணைத்து இலவசச் சேவை அளிக்கிறது. அதாவது, அவர்கள் வாடிக்கையாளர்களிடம் சேவைக்குக் கூடுதல் பணம் வாங்கப்போவதில்லை. மாறாக, சேவையையே இலவசமாகக் கொடுக்கப்போகிறார்கள் என்பதுதான் பலருடைய புரிதல். சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் 50%-க்கும் மேலான மக்கள் இணையத்தைப் பயன்படுத்திவரும் நிலையில், இந்தியாவில் 20% மக்களே இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழலில், ரிலையன்ஸ் - ஃபேஸ்புக் கூட்டுத் திட்டத்தால் லட்சக் கணக்கான இந்தியர்கள் முதல்முறையாக இணையதள சேவையைப் பெறுவார்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
உண்மையாகவே ஊர்கூடி வரவேற்க வேண்டிய திட்டமா இதுவென்றால், இல்லை என்பதே அதற்கான பதிலாக இருக்கிறது. காரணம், இந்தக் கூட்டால் இணைய நடுநிலை வெகுவாகப் பாதிக்கப் படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்தத் திட்டத்தின்படி இணையம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்படும். ஆனால், எந்தெந்தத் தளங்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை ரிலையன்ஸ் - ஃபேஸ்புக் நிறுவனங்களே தீர்மானிக்கும். அதாவது, ‘இன்டெர்நெட்.ஆர்க்’ தரும் சேவையானது சிலருக்குச் சாதகமாகவும் பலருக்குப் பாதகமாகவும் மாறும்.
இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். 2014-ல் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 8 கோடியை எட்டியுள்ளது. 2013-ஐக் காட்டிலும் இது இருமடங்கு. இந்த ஆண்டு மேலும் ஒரு மடங்கு அதிகரித்து 16 கோடியைத் தொடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள், சுதந்திரமான இணைய உலகில் நுழைபவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மாற்றாக, சந்தை இணைய உலகில் அவர்களைத் திணித்துவிடும் அபாயத்தை ‘இன்டெர்நெட்.ஆர்க்’ திட்டம் முன்னிறுத்துகிறது.
இந்தியர்களுக்கான இணைய சேவை அவரவர் தேர்வுப்படியானதாக இருக்க வேண்டுமே தவிர, அதை அளிக்கும் நிறுவனங்களின் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் அமையக் கூடாது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் உடனடியாகக் கவனிக்க வேண்டிய விவகாரம் இது!