சும்மா விடக் கூடாது கருப்பு பூதத்தை!

சும்மா விடக் கூடாது கருப்பு பூதத்தை!
Updated on
2 min read

சுவிட்சர்லாந்து வங்கிகளில் 1,195 இந்தியர்களுக்குச் சொந்தமான கணக்குகளில், ரூ. 25,420 கோடி இருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அதை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கூக்குரலும் நெருக்குதலும் மோடி அரசுக்கு நிர்ப்பந்தமாகிக்கொண்டிருக்கிறது. “வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டிருப்பது யார் என்பதைவிட, அந்தப் பணம் எப்படி அவர்களுக்குக் கிடைத்தது, அதற்கு வரி செலுத்தியிருக்கிறார்களா, இந்தியாவில் சம்பாதித்ததா, வெளிநாட்டில் சம்பாதித்ததா என்றெல்லாம் விசாரிப்பதுதான் முக்கியம்” என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சொல்லியிருக்கிறார். சரிதான்.

சர்வதேச அளவில் புலனாய்வுச் செய்தியாளர்கள் வெளிக்கொண்டு வரும் இந்தப் பட்டியல்கள் செய்திகளாகிவிடுவதாலேயே, இவர்கள் அனைவரும் முறைகேடாகப் பணம் சம்பாதித்தவர்கள் என்றோ ரகசியமாகக் கணக்கு வைத்திருப்பவர்கள் என்றோ முடிவுகட்டிவிட முடியாது என்பது உண்மைதான். சுவிட்சர்லாந்து வங்கியில் ஒருவர் கணக்கு வைத்திருக்கிறார் என்றாலே, அவர் அதை ரகசியமாகத்தான் வைத்திருக்கிறார், முறைகேடாகச் சம்பாதித்த பணம் அல்லது வரி ஏய்ப்பு செய்த பணத்தைத்தான் அதில் போட்டு வைத்திருக்கிறார் என்ற பொதுவான எண்ணம் அனைவருடைய மனங்களிலும் ஊறியிருக்கிறது. இதற்கு இப்படியான பட்டியல்களில் இடம்பெறும் பிரபலங்களின் பெயர்களும், அவர்கள் தொடர்பான புனைவுகளும் கிசுகிசுக்களும்கூட ஒரு காரணம். இப்படி ஒரு பெரும் தொகையை நெருங்கிவிட்டோம் என்பதாலேயே அதை அப்படியே கைப்பற்றி அரசின் கருவூலத்துக்குக் கொண்டுவந்துவிடலாம் என்பதெல்லாம்கூட அரசியல் மேடை வசனங்களில் மட்டுமே சாத்தியம். ஆனால், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் எல்லா வங்கிக் கணக்குகளும் அவற்றில் உள்ள தொகையும் முழுக்க முழுக்கப் பரிசுத்தமானவை என்று சொல்லிவிட முடியுமா, என்ன? வெளிநாட்டு வங்கிகளைப் பலர் தேட முதல் காரணம் வரி ஏய்ப்புதானே?

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கருப்புப் பண விவகாரத்தை ஒரு பெரும் ஆயுதமாகக் கையாண்ட கட்சி, ஆட்சிக்கு வந்த பின் அதில் ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு யதார்த்தமானது மட்டுமல்ல; பாஜகவைப் பொறுத்த அளவில் அது ஒரு கடப்பாடும்கூட. வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு, அந்தப் பணத்தை மீட்டுவர சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) நியமிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் 628 பேர் அடங்கிய பட்டியல் அதன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவற்றில் 428 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அடையாளம் கண்டது. அவர்களில் 128 பேருடைய கணக்குகள் பரிசீலிக்கப் பட்டு, உத்தரவுகளும் தயாராகிவிட்டன. வருமானக் கணக்கைத் தெரிவிக்காமல், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ததாக 60 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் சரி. கூடவே, கருப்புப் பண மீட்பு தொடர்பாக மோடி அரசு ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைத் தாண்டி யோசிக்க வேண்டும்.

கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதும் கொண்டுவருவதும் சிக்கலான செயல். இந்தியாவைப் பொறுத்த அளவில் இன்னும் கூடுதல் சிக்கல். சட்ட வரம்புக்கு உட்பட்டுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆரோக்கியமான நடைமுறையை எல்லா நாடுகளுடனும் நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பழைய சட்ட விதிகள் / நடை முறைகளைத் தாண்டி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கருப்புப் பண பூதங்களை முடக்குவதற்கும் தண்டிப்பதற்கும் காலத்துக்கேற்ற புதிய வியூகங்களைக் கையாள்வது முக்கியம். இன்னமும் பழைய பாதையிலேயே அரசு சென்றுகொண்டிருந்தால், விசாரணை அமைப்புகள் செயல்படத் தொடங்கும்போது பூதங்கள் தங்கள் ஆட்டத்தையே முடித்திருக்கும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in