Published : 06 Feb 2015 08:25 AM
Last Updated : 06 Feb 2015 08:25 AM

பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்துங்கள்!

சமீப காலமாக அதிகம் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் விஷயங் களில் பொது விநியோகத் திட்டமும் ஒன்று. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அனுமதிக்கும் அளவைவிட அதிகமாக, சராசரியாக ஒருவருக்கு 11 கிலோ உணவு தானியம் மாதந்தோறும் தேவைப்படுகிறது. இந்த அளவு கொடுப்பதாக இருந்தால், இப்போது இருப்பதைவிட அதிக அளவு தானியங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். மானியச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். ஆண்டுதோறும் பொது விநியோகத்துக்காக 610 லட்சம் டன்கள்தான் உணவு தானியத்தைக் கொள்முதல் செய்ய முடியும்.

அது இப்போது இருக்கும் மக்கள்தொகையில் பாதிப் பேருக்குக்கூடப் போதாது. இதற்கிடையில், பொது விநியோகத் திட்டத்துக்கென அளிக்கப்படும் உணவு தானியங்களில் 47% - அதாவது, கிட்டத்தட்ட சரிபாதி - உரியவர்களுக்குப் போய்ச்சேர்வதில்லை என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்தச் சூழலில், ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் - 2013’ சிறப்பாக அமல்படுத்தப்படுவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சாந்தகுமார் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, முக்கியமான சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. ‘மக்கள்தொகையில் 67% பேருக்குப் பதிலாக 40% பேருக்கு மட்டும் மானிய விலையில் உணவு தானியங்களை, அதுவும் ஒரு நபருக்கு 7 கிலோ என்று உயர்த்தி அளிக்க வேண்டும். நெல், கோதுமை போன்றவற்றுக்குக் கொள்முதல் விலையாக அரசு எவ்வளவு தருகிறதோ அதில் சரிபாதி விலைக்கு இதை விற்கலாம்’ என்பவை அவற்றில் முக்கியமானவை.

குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உணவு தானியங்கள் மானிய விலையில் அல்லது விலையில்லாமல் தரப்படுகின்றன. சாந்தகுமார் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டால், இவ்விரு மாநிலங்களுக்கும் மானியச் சுமை பெரிதும் கூடிவிடும். அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் உணவு தானியங்களின் அளவும் குறைக்கப்படலாம்.

தானியங்களின் விலை, அளவு போன்றவை ஒரு புறம் இருந்தாலும், அவற்றின் தரமும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. குறைந்த விலையில் கொடுத்தாலும் தரமற்று இருப்பதாலேயே பலர் தானியங்களை வாங்க மறுக்கின்றனர். எனவே, நல்ல தரத்தில், நியாயமான விலையில் உரிய கால இடைவெளியில் உணவு தானியங்களை வழங்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய தேவைக்கேற்ற விநியோகத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்துவதும் வலுப்படுத்துவதும் முக்கியம். தமிழகமும் சத்தீஸ்கரும் பொது விநியோகத் திட்டத்தில் முன்னோடி மாநிலங்களாக இருக்கின்றன. இதைப் பிற மாநிலங்களும் பின்பற்றினால் மக்களுக்குப் பலன் கிடைக்கும்.

பொது விநியோகத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்துவது எப்படி என்பதுதான் அரசின் சிந்தனையாக இருக்க வேண்டுமே தவிர, எப்படிக் குலைப்பது என்பதல்ல. மானியத்தைக் குறைப்பது, ஒழிப்பது மட்டுமே லட்சியமாக இருக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x