Published : 30 Jan 2015 08:56 AM
Last Updated : 30 Jan 2015 08:56 AM

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மரணம் அங்கு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சவூதியில் இன்னும் மன்னராட்சிதான் நீடிக்கிறது. அப்துல்லாவுக்கு அடுத்ததாக அவருடைய தம்பி சல்மான் பட்டத்துக்கு வந்திருக்கிறார். ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்கும் என்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் இப்போது இருக்கும்படியே தொடரும் என்றும் சல்மான் அறிவித்திருக்கிறார். சல்மானுக்கும் வயது அதிகமாகிவிட்டதால், இளவரசர் முக்ரின், முகம்மது பின் நயீஃப் ஆகியோரை அரச பதவிக்கான வாரிசுகளாக அவர் அறிவித்திருக்கிறார்.

அப்துல்லா தனது ஆட்சிக் காலத்தில் புரட்சிகரமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இல்லையென்றாலும், அவரது ஆட்சிக் காலத்தில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கவும், ஒலிம்பிக்கில் போட்டியிடவும் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அது மட்டுமல்லாமல், தனது நாட்டின் அறிவியல் மேம்பாட்டுக்கும் அப்துல்லாவின் ஆட்சி பெருமளவு பங்களித்திருக்கிறது.

வளைகுடா பகுதியில் அரசியல் வானிலை இப்போது சரியில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை கடுமையாகச் சரிந்திருக்கிறது. எண்ணெய் வியாபாரத்தில் கடும் போட்டி நிலவுகிறது. எண்ணெய் வள நாடுகள் இப்போது வருவாய் இழப்பையும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்நோக்கியுள்ளன. எனவே, சவூதி அரேபியாவில் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதும், புதிய அரசு இப்போதைய கொள்கைகளை மாற்றமின்றிக் கடைப்பிடிப்பதும் அவசியம்.

சவூதி அரேபியாவில் சன்னி முஸ்லிம் பிரிவினர் ஆதிக்கம். ஈரானில் ஷியா பிரிவினர் ஆதிக்கம். இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாகக் கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தங்கள் நாட்டுக்குள் பரவிவிடாமல் திறமையாகத் தடுத்துவருகிறது சவூதி என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுடன் ராணுவரீதியிலான நட்புறவை சவூதி பராமரித்துவருகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, சரக்கு தேங்கிவிட்ட நிலையில்கூட உற்பத்தி அளவைக் குறைக்காமல் சவூதி அரசு தொடர்ந்து உற்பத்தி செய்து விற்கிறது. விலையை உயர்த்துவதற்காக எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அது ஏற்கவில்லை.

சவூதி அரேபியாவுடன் இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது. இந்தியா வின் பெட்ரோலியத் தேவையில் 20.18% அந்நாட்டிடமிருந்துதான் பெறப்படுகிறது. லட்சக் கணக்கான இந்தியர்கள் சவூதி அரேபியாவில்தான் வேலை செய்கிறார்கள். கணிசமான தொகையை இந்தியாவுக்கு அவர்கள் அனுப்புகிறார்கள். சவூதி அரேபியாவின் ஏற்றுமதியில் 11%, இறக்குமதியில் 7.2% இந்தியாவுடன்தான் என்பதிலிருந்தே நமக்கு சவூதி எவ்வளவு முக்கியம் என்பது புலனாகும்.

தங்களுக்கு மிகவும் உற்ற நாடு என்பதால், சவூதி அரேபிய அரசின் மனித உரிமை மீறல்களைக்கூட மேற்கத்திய நாடுகள் கண்டுகொள்வதில்லை என்ற வருத்தம் பல வட்டாரங்களில் உண்டு. மக்களுக்கு அரசியல், குடிமை உரிமைகளைப் போதிய அளவில் வழங்கவில்லை என்பதுடன், பெண்களுக்கும் பல உரிமைகள் இன்னும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. மன்னராட்சியிலிருந்து மக்களாட்சியை நோக்கி நகர்வதுதான் சவூதியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சவூதியில் அமைதியும் நிலையான அரசும் தொடர்வது உலக நாடுகளுக்கு மிகமிக முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x