

அரசு, ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் பொது வேலை நிறுத்தத்தை நீடிக்க விடாமல் கையாண்டிருக்கிறது. “அரசுத் துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதால் தனியார் துறையிடம் நிலக்கரித் துறை ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று அஞ்ச வேண்டாம், அரசுக்கு அத்தகைய எண்ணம் இல்லை” என்று அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், நிலக்கரி வயல்களிலிருந்து நிலக்கரியை வெட்டியெடுக்கத் தனியாருக்குக் குத்தகை விடுவதன் விளைவுகள்குறித்து ஆராயவும் உயர் நிலைக்குழு அமைக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தொழிற்சங்கங்கள் முதலில் அறிவித்த ஐந்து நாள் வேலை நிறுத்தத்தை ஒரு நாளோடு முடிவுக்குக் கொண்டுவந்தன.
நாட்டின் இயக்கத்துக்கு, மின்சார உற்பத்திக்கு நாம் பெரிதும் அனல் மின் நிலையங்களையே நம்பியிருக்கிறோம். நம் நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஐந்தில் மூன்று பங்கு அனல் மின் நிலையங்களிலிருந்துதான் கிடைக்கிறது. உலகிலேயே நிலக்கரி வளத்தில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. நிலக்கரி வயல்கள் அனைத்தும் அரசு வசமே உள்ளன. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் நிலக்கரி உற்பத்தியில்கூட நம்மால் தன்னிறைவை அடைய முடியவில்லை.
மின்சாரத் தேவை பூதமாக உருவெடுக்கும் காலத்தில், நிலக்கரி உற்பத்தி ஆண்டுதோறும் 6% அளவுக்குத்தான் வளர்ச்சி கண்டுவருகிறது. விளைவாக, வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் நிலக்கரியை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். கடந்த நிதியாண்டில் மட்டும் 1,700 கோடி டாலர்கள் மதிப்புக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறது. நிலக்கரிக் கொள்கையில் நிலவும் அரசியலுக்கு இதில் முக்கியப் பங்குண்டு.
ஆனால், ஏதோ பொதுத் துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’வின் போதாமைகள்தான் நிலக்கரி உற்பத்தியில் நம்முடைய பின்னடைவுக்குக் காரணம் என்பதுபோல, நிலக்கரி உற்பத்தியில் தனியார் பங்களிப்பை அதிகமாக்கியது அரசு. அங்கும் ஏகப்பட்ட நிலக்கரி வயல்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள். கூடவே, அரசின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கை என்ற பெயரில், ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் பங்குகளில் ஒரு பகுதியை விற்று நிதி திரட்டவும் அரசு முடிவெடுத்தது.
ஒருபுறம் நிலக்கரி வயல்கள் தனியாருக்குக் குத்தகைக்கு விடப் படுகின்றன, மறுபுறம் அரசு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் விற்கப் படுகின்றன. இத்தகைய சூழலிலேயே, அரசின் நோக்கம்குறித்துத் தொழிற்சங்கங்கள் அச்சம் அடைந்தன. நிலக்கரித் துறையைத் தனியாருக்குக் கைமாற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தின்பேரிலேயே வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. வெறும் வாக்குறுதிகளால் தொழிற்சங்கங்களின் வாயை அடைத்துவிடுவதாலேயே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது.
இந்தியாவிலேயே நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். நிலக்கரி உற்பத்தியில், தன்னுடைய பங்களிப்பைக் குறைத்துக்கொண்டு, தனியார் பங்கை அதிகரிப்பதற்கு மாற்றாக ‘கோல் இந்தியா’வின் புனரமைப்புக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திடும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
2022-க்குள் நாடு முழுக்கத் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோஷத்தை முழுமையாக நிறைவேற்ற மோடி அரசு சீர்திருத்தத்தை மேற்கொள்ள எடுத்துவைக்கும் முதல் அடியாக ‘கோல் இந்தியா’வை நோக்கி அரசின் நகர்வே இருக்க முடியும்!