

உள்ளூரில் அநாகரிக, ஆபாச அரசியல் செய்தாலும் சர்வதேச அரசியலைப் பொறுத்த அளவில் குறைந்தபட்சம் வார்த்தைகளை உதிர்ப்பதிலாவது கண்ணிய அரசியலைக் கடைப்பிடிப்பதே மரபு. இதற்கு விதிவிலக்காக நிறைய உளறல்கள் சரித்திரத்தில் உண்டு என்றாலும், தென் கொரிய அதிபர் பாக் குன் ஹே மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா மீதான வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தாக்குதல் சகித்துக்கொள்ள முடியாதது.
தென் கொரிய அதிபர் பாக் குன் ஹேயைப் பாலியல் தொழிலாளியோடும் அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பாலியல் தொழில் தரகரோடும் ஒப்பிட்டுச் சாடியிருக்கிறார் கிம் ஜோங் உன். தென் கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங் பக்குக்கும் இப்படி வட கொரியாவால் தாக்கப்பட்ட அனுபவம் ஏற்கெனவே உண்டு. எனினும், இந்த விஷயத்தைத் தென் கொரியர்கள் உணர்ச்சிபூர்வமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம், தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் பாக் குன் ஹே.
வெறுப்பின் உச்சத்தில் உமிழப்படும் இப்படிப்பட்ட வார்த்தைகள் உண்மையில் யாரைத் தாக்கப் பயன்படுத்தப்படுகின்றனவோ அவர்களைச் சிறுமைப்படுத்திவிடுவதில்லை; மாறாக, அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவோரின் சிறுமையையே வெளிப்படுத்துகின்றன. இந்த விஷயத்தில் உலகெங்கும் அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கும் எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்களும் பெண்கள் மீதான ஆதிக்க மனோபாவத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பதற்கும் கூடுதல் உதாரணமாகியிருக்கின்றன கிம் ஜோங் உன்னின் வார்த்தைகள்.
கொரிய தீபகற்பத்தின் அமைதி அந்த இரு நாடுகளின் ஒற்றுமையிலேயே இருக்கிறது. இன்னமும்கூட இரு நாட்டு மக்களும் ஒன்றிணைந்த கொரிய கனவுடனேயே காலத்தைக் கழிக்கின்றனர். குறிப்பாக, தென் கொரியாவுடன் ஒப்பிடும்போது, வளர்ச்சியில் கடுமையாகப் பின்தங்கியிருக்கும் வட கொரியாவில் இணைப்புக்கான ஏக்கங்கள் அதிகம். ஆனால், நாடு தங்கள் சர்வாதிகாரப் பிடியிலிருந்து தளர்ந்துவிடக் கூடாது என்று நினைக்கும் வட கொரிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து இரு தேச மக்களிடையே வெறுப்பைப் பரப்புவதை ஓர் உத்தியாகவே கையாள்கின்றனர். வட கொரிய அதிபரின் இப்போதைய தாக்குதலைக்கூட இரு நாட்டு மக்களிடையேயான உறவுக்கு இடையே பலத்த சுவரை எழுப்பும் முயற்சியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்ட வெறுப்பு சாக்கடை அரசியலினால் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன?
உண்மையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பெரிய வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வட கொரியாவைப் பரிதாபத்தோடு அணுகுவோரைக்கூட இது சங்கடத்தில் தள்ளும்; வட கொரியா மீதான நல்லெண்ணங்களைக் குழிதோண்டிப் புதைக்கவே வழிவகுக்கும். தான் தோண்டியிருக்கும் சாக்கடைப் புதைகுழியில் தானே சிக்கிக்கொள்ளப்போகிறார் கிம் ஜோங் உன்!