

மருத்துவ வசதிகளை இந்தியக் குடிமக்கள் பெறுவதை அடிப்படை உரிமையாக்க, புதிய தேசிய சுகாதாரக் கொள்கை வகுக்கப்படுகிறது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம் தயாரித்து பொதுப் பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது.
மாநில அரசுகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அமைப்புகள், மருத்துவர்கள், சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகநல அமைப்புகள் என்று அனைத்துத் தரப்பினரும் இந்தக் கொள்கையை அலசி ஆராய்ந்து, அதில் சேர்க்க வேண்டிய கருத்துகளையும் விலக்க வேண்டியவற்றையும் யோசனையாகப் பரிந்துரைக்கலாம். வரும் பிப்ரவரி 28 வரையில் இதற்குக் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவு வாசகத்தின்படி, மருத்துவ வசதி பெறுவது இந்தியர் யாவருக்கும் இனி சட்டபூர்வமான உரிமையாகும். கல்வி பெறுவதுபோல, மருத்துவ வசதியும் அடிப்படை உரிமையாகும்.
ஒரு ஜனநாயக அரசு ஆளும் நாட்டில், கல்வியும் மருத்துவமும்கூட இப்போதுதான் அடிப்படை உரிமையாகிறது என்பதற்காக வேதனைப்படுவதா அல்லது இப்போதாவது நடக்கிறதே என்று ஆறுதலடைவதா என்று தெரியவில்லை.
இவ்வாறு சுகாதார வசதிகளை அடிப்படை உரிமையாக்குவதைத் தொழில்வள நாடுகள் என்றோ செய்துமுடித்துவிட்டன. பிரேசில், தாய்லாந்து போன்ற வளரும் நாடுகள்கூட இதற்கான சட்டங்களை இயற்றிவிட்டன. நாம் பின்தங்கியிருக்கிறோம். 13 ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசு தேசிய சுகாதாரக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்த பிறகு, இப்போது மோடி தலைமையிலான புதிய அரசு இந்த யோசனையை வெளியிட்டிருக்கிறது. சுகாதாரத்தை அளிப்பதில் மட்டுமல்ல, அதைப் பற்றிய சிந்தனையிலும் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.
அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும், பேறு காலங்களில் கர்ப்பவதிகளின் இறப்பு தடுக்கப்பட வேண்டும், பிறந்த சிசுக்கள் ஊட்டச்சத்துக் குறைவாலோ, மருத்துவக் கவனிப்பின்றியோ இறப்பதைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கங்களை எல்லாம் இந்தக் கொள்கையால் சாத்தியப்படுத்த முடியும். வசதி படைத்தவர்களுக்கும் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கும் மட்டும்தான் நவீன சிகிச்சைகள் என்ற நிலையை மாற்ற முடியும். ஆனால், இவையெல்லாம் நடக்க வெறுமனே ஏட்டளவோடு நிற்காமல், அதற்கேற்றக் கட்டமைப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) குறைந்தபட்சம் 2.5 சதவீதமாவது தேசிய சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று தேசியக் கொள்கை கருதுகிறது. இது நபர்வாரியாக சுமார் ரூ.3,800 ஆக இருக்கும். ஆனால், இந்தியா போன்ற பெரிய நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையும் சுகாதார வசதிகளும் செய்துதர ஜி.டி.பி-யில் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது ஒதுக்கப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த தலைமை மருத்துவமனை அமைக்கப்படுவது அவசியம். மாவட்டந்தோறும் மருத்துவ செவிலியர் பயிற்சிப் பள்ளி, மருத்துவக் கருவிகளைக் கையாள்வோருக்கான தொழில் பயிற்சி மையம் போன்றவற்றுக்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டும். அரசுத் துறையில் மருந்து தயாரிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சித் துறையில் பெருமளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மனிதர்களுக்கான இந்தச் சட்டபூர்வ உரிமை கால்நடைகளுக்கும் பறவையினங்களுக்கும்கூட விரிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையான அக்கறையும் முனைப்பும் இருந்தால் அரசால் இது எல்லாமும் சாத்தியம்!