Published : 28 Jan 2015 09:08 AM
Last Updated : 28 Jan 2015 09:08 AM

கிரேக்கத்தை மீட்பாரா சிப்ராஸ்?

மாற்றத்தின் காற்று வீசுகிறது கிரேக்கத்தில்! கிரேக்க நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிரீஸா கட்சியின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் பிரதம மந்திரியாகப் பதவியேற்றிருக்கிறார்.

பொருளாதார வீழ்ச்சியால் தள்ளாடிக்கொண்டிருந்த கிரேக்கத்தில், மாற்றம் வேண்டும் என்று அந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

உலகின் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இருக்கும் கிரேக்கத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். தொழிலாளர்களில் 25% பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் கிரேக்கம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் நூற்றுக் கணக்கில் சுகாதார மையங்கள், சமூக உணவுக் கூடங்கள், கல்வி மையங்கள், சட்ட உதவி மையங்கள் அரசால் திறக்கப் பட்டுள்ளன. கிரேக்கம் கிட்டத்தட்ட முடங்கிப்போயிருக்கிறது. இந்தச் சூழலின் வெளிப்பாடாகத்தான் கிரேக்கத்தில் உள்ள சாதாரணக் கட்சிகளுள் ஒன்றான சிரீஸா கட்சி 149 தொகுதிகளில் பெற்ற வெற்றியைக் குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத்தின் மொத்தத் தொகுதிகள் 300. இதில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் யாருடைய தயவும் இல்லாமல் சிரீஸா கட்சி ஆட்சிக்கு வந்திருக்கலாம். ஆனால், தீவிர இடதுசாரிக் கட்சியான சிரீஸா கட்சி இப்போது சுதந்திர கிரேக்கர்கள் என்ற வலதுசாரிக் கட்சியுடன் கூட்டணி அரசு அமைத்திருப்பதுதான் நகைமுரண். சுதந்திர கிரேக்கர்கள் கட்சிக்கு 13 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. கடன் பிரச்சினையைக் குறித்த கொள்கை மட்டுமே இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான ஒற்றுமை.

கிரேக்கம் இன்றிருக்கும் நிலையில் கடன் சுமைகளை உதறிவிட முடியாது. கடன் கொடுத்த நாடுகள் அனைத்தும் கடனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று புதிய பிரதமர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதை ஏற்க முடியாது என்று கடன் கொடுத்த நாடுகள் மறுத்துவிட்டன. சர்வதேச அரங்கில் இப்படியொரு கோரிக்கையை வைப்பதற்கே துணிச்சல் வேண்டும். 40 வயதில் பிரதமராகியிருக்கும் சிப்ராஸ், இயல்பாகவே துடிப்புமிக்கவராக இருக்கிறார். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அவருடைய பிரச்சாரம் மக்களிடையே நன்கு எடுபட்டது. ஆனால், நாட்டின் வருவாயைப் பெருக்கினால்தான் கடன் சுமையைக் குறைக்க முடியும். செலவுக்கே கடன் வாங்கினால்தான் முடியும் என்ற நிலையில், எந்த உத்தியை அவர் கையாளுவார் என்பதைப் பிற நாடுகளும் ஆர்வமாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல்தான் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களின் சூத்ரதாரி. கிரேக்கத்தின் புதிய பிரதமரின் முதல் வேண்டுகோளான கடன் தள்ளுபடியை அவர் நிராகரித்துவிட்டார். ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு அளித்த 240 பில்லியன் ஈரோ டாலர்கள் கடனுதவியால்தான் கிரேக்கப் பொருளாதாரம் சீர்குலையாமல் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. கடன் தள்ளுபடிதான் சிக்கன நடவடிக்கையிலிருந்து மீட்க ஒரே வழியா, அல்லது கிரேக்கம் மறுபடியும் பழைய பாதையிலேயே பயணிக்குமா என்பது போகப்போகத் தெரியும்.

எதிரெதிர் துருவங்களின் இந்தக் கூட்டணி பிளவுபட்டால், புதிய அரசு கவிழ்ந்துவிடும். ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் கிரேக்கத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குப் போய்விடும்.

கிரேக்கத்தின் வீழ்ச்சி என்பது உலகமயமாதல் என்ற சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும் உலக நாடுகளுக்கு அது மோசமான செய்தியாக அமைந்துவிடும். கிரேக்கத்தை மீட்பாரா சிப்ராஸ்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x