

ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்தான் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அந்த இதழின் ஆசிரியர், கேலிச்சித்திரக்காரர்கள் நால்வர், காவலர்கள் இருவர் உட்பட 12 பேரைப் பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். பேனாவுக்கு மாற்று பேனாதானேயொழிய, துப்பாக்கி அல்ல என்பதை உணராத அந்தப் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலின் மூலம் பிரான்ஸில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்!
டேனிஷ் பத்திரிகையில் வெளிவந்து, பெரும் கலவரத்துக்குக் காரணமான முஹம்மது நபியின் கேலிச்சித்திரத்தை 2006-ல் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை மறுபிரசுரம் செய்து சர்ச்சைக்குள்ளானது. அப்போதிலிருந்து தொடர்ந்து அந்தப் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அந்த நிலையில், 2011 நவம்பரில் அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் மீது தீக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும், அந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் 2011 நவம்பரில் இஸ்லாம் மதத்தைப் பற்றிய ஒரு கேலிச்சித்திரத்தை அந்த இதழ் வெளியிட்டது.
‘சார்லி ஹெப்டோ’ இஸ்லாம் மதத்தை மட்டுமல்ல, கிறிஸ்தவம், யூத மதம் என்று எல்லாவற்றையும் கடுமையாக விமர்சிக்கும் அங்கதக் கட்டுரைகளையும் கேலிச்சித்திரங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கேலிச்சித்திரமாக இதழின் அட்டையில் வெளியிட்டிருந்தது பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது. அதிகாரங்களையும் புனிதங்களையும் கடுமையாக விமர்சித்தல் என்பதும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை அம்சம் என்றே அந்த இதழ் கருதுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினை. படைப்புகளை உருவாக்குபவர்கள் கத்தி மேல் நடப்பதுபோல் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சமீபத்திய உதாரணங்களாக ஆமிர் கானின் ‘பி.கே.’ திரைப்படத்துக்கும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கும் எழுந்த சகிக்க முடியாத எதிர்ப்புகளைக் குறிப்பிடலாம். தனது படைப்பின் எந்த விஷயம் யாருடைய மனதைப் புண்படுத்தக்கூடும் என்ற அச்சத்திலும் ஐயத்திலும் இருந்து கொண்டிருந்தால், எந்தப் படைப்பாளியாலும் படைப்பாக்கத்தில் ஈடுபட முடியாது.
தொடர்ச்சியான இது போன்ற தாக்குதல்களுக்குப் பிறகு உருவாகி யுள்ள சூழலில், சில விஷயங்களில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களில் மிகவும் குறைந்த சதவீதத்தினரின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி விடுவது ஆபத்தானது. இந்தச் சூழலில், சிட்னி தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம்கள் மீது வெறுப்பாளர்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக ‘நான் உங்களுக்குத் துணையாகப் பயணம் செய்கிறேன்’ என்று உருவாக்கப்பட்ட ஹேஷ் டேகையும் அதன் அடிப்படையிலான ஆஸ்திரேலிய மக்களின் நன்னம்பிக்கைச் செயல்பாடுகளையும் குறிப்பிட்டாக வேண்டும்.
அதேபோல், பாரீஸ் தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் ஜெர்மனியில் முஸ்லிம்கள் மீது எழுந்துள்ள வெறுப்பைப் போக்கவும், அந்த மக்களுக்குத் துணைநிற்கும் விதத்திலும் மாபெரும் பேரணியை ஜெர்மானியர்கள் நடத்தினார்கள்.
நன்னம்பிக்கை மூலமாகத்தான் சமூகம் முன்னால் செல்ல முடியுமே தவிர, வெறுப்பின் மூலமாக அல்ல என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் சரியான எடுத்துக்காட்டுகள்.