வளர்ச்சி என்பது எண்களின் விளையாட்டல்ல!

வளர்ச்சி என்பது எண்களின் விளையாட்டல்ல!
Updated on
2 min read

உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.), பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான நாடுகள் அமைப்பு (ஓ.இ.சி.டி.) என்ற மூன்றுமே சொல்லி வைத்தாற்போல, இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என்று கணித்துள்ளன. 2016-17-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5% ஆக இருக்கும் என்கிறது ஐ.எம்.எஃப். அப்போது சீனாவின் வளர்ச்சி வீதம் 6.3% ஆக இருக்குமாம்.

இரு நாடுகளின் வளர்ச்சி வீதமும் ஒன்றாகப் போகிறது என்றால், அதற்குக் காரணம் சீனா தன்னுடைய வேகத்தை, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தானாகவே குறைத்துக்கொள்வதுதான். 2003 முதல் 2009 வரையிலான காலத்தில் சீன டிராகனும் இந்திய யானையும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சி அடைவதாக உலகமே வியந்தது. அப்போது இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் வளர்ச்சி வீதம் சரிந்து 5% முதல் 6% ஆகவே இருக்கிறது. 1990 முதல் 2013 வரையில் சீனாவின் அனைத்துத் துறை வளர்ச்சி வீதம் 10%-க்கு மேல் இருந்தது. எனவே, இரு நாடு களையும் ஒப்பிடுவதில் உண்மையான அர்த்தம் இருக்க வேண்டும் என்றால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவும் தொடர்ந்து 8% முதல் 9% வரையிலான வளர்ச்சியை எட்ட வேண்டும்.

இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடும்போது சேமிப்பு விகிதம் வெறும் 30% ஆகத்தான் இருக்கிறது. இது கணிசமாக மேலும் அதிகரிக்க வேண்டும். சீனத்தில் இது 51% ஆக இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 4 ஆண்டுகளுக்கு முன்னால் 35% ஆக இருந்த சேமிப்பு விகிதம், படிப்படியாகக் குறைந்து கடந்த 4 ஆண்டுகளாக வெறும் 30% ஆக இருக்கிறது. இப்போதுள்ள சேமிப்பு விகிதப்படி பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கிறது. வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, விலைவாசியைக் கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். முக்கியமாக, சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.

சீனாவின் வெற்றிக்கு அதன் சமூகக் காரணிகளும் காரணம். அதனால்தான் அதன் தொழிலாளர்களுடைய உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 74%தான். சீனாவில் இது 95%. இந்தியக் கல்வியின் தரம் போதிய அளவு இல்லை. எழுத, படிக்க, கணக்குகளைப் போட பள்ளிப்படிப்பை முடித்தவர்கள்கூடத் திணறும் போக்கு நல்லதல்ல. சீனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதன் மனிதவள மேம்பாடுதான். முக்கியமாக, இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனாவில் இப்போது தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரித்துவருகிறது. அடுத்தது சுகாதாரம். நம் நாட்டில் சிசு மரணம் 1,000 குழந்தைகளுக்கு 43 ஆக இருக்கிறது. சீனாவைப் போல மூன்று மடங்கு அதிகம்.

வளர்ச்சி என்பது எண்களின் விளையாட்டல்ல. மக்களுக்கு நல்ல உணவும் கல்வியும் மருத்துவ வசதிகளும் செய்துதருவதுதான், அரசின் பிரதான நோக்கங்களாக இருக்க வேண்டும். இவை செலவுகள் அல்ல, பொருளாதார வளர்ச்சிக்கான ஆரோக்கிய முதலீடுகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in