

மகாராஷ்டிரத்தில் நடந்துமுடிந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அதிலும், மும்பை, புனே, நாகபுரி, அமராவதி போன்ற நகரங்களில் தான் இப்படி அதிக வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த முறை வாக்காளர்கள் பட்டியலில் பெயர்களை நீக்கவும் சேர்க்கவும் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபடுத்தப்பட்டதாம். அந்த நிறுவனம் வாக்காளர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு, தொகுதிவாரியாக முகவரிகளில் சோதித்ததாகவும், அதில் குறிப்பிட்டிருந்த பெயர்கள் குறிப்பிட்ட முகவரிகளில் இல்லாமலிருந்ததால் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
60 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை எந்த நிறுவனத்தாலும் 6 மாதங்களுக்குள் விசாரித்துச் சரிபார்த்து நீக்கியிருக்க முடியாது என்பதே உண்மை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுபவக்குறைவு அல்லது அதைச் சரிபார்க்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியம் அல்லது ஆட்சியாளர்களின் திட்டமிட்ட சதி போன்றவைதான் இந்தத் தவறுக்குக் காரணமாக இருக்க முடியும். நடந்த சம்பவம்குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், அதற்காக வாக்காளர்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறது.
48 மக்களவைத் தொகுதிகளிலும் மறுதேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதான அரசியல் கட்சிகள் நியாயமாகவே கோரியுள்ளன. இந்தச் சதிகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற அவற்றின் கோரிக்கையும் நியாயமானதே.
வாக்காளர் பட்டியலைத் திருத்துவதும் பிழையின்றித் தயாரிப்பதும் முக்கியமான வேலை. ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதை மாநில வருவாய்த் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உதவியுடன் செய்ய வேண்டும். தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் உள்ளதைப் போல புகைப்படத்துடன் கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு தர வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டைகள் அதிகாரபூர்வ ஆவணமாகப் பாவிக்கப்படும் இந்தத் தருணத்தில், இது மிகமிக அவசியம். பாஸ்போர்ட் என்றழைக்கப்படும் கடவுச் சீட்டுக்கு உள்ள முக்கியத்துவம் வாக்காளர் அடையாள அட்டைக்கும் அளிக்கப்பட வேண்டும். படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக வாக்காளர்கள் இடம்பெயரும்போது அவர்களுடைய முகவரியை மாற்றுவதற்கும் புதிய இடத்தில் அவர்கள் வாக்குரிமை பெறுவதற்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஏராளமான வாக்காளர்கள் வாக்குரிமை இழப்பது தவிர்க்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் பணி ஒவ்வொரு தேர்தலுக்கும் சிறப்படைந்துகொண்டேவருகிறது. அதன் கெடுபிடிகள் அரசியல் கட்சிகளுக்குக் கசப்பாக இருந்தாலும், நடுநிலையாளர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பெயர்ப் பட்டியல் இரண்டிலும் தேர்தல் ஆணையம் மேலும் அக்கறை செலுத்தினால் இந்தியா உலகின் பிற ஜனநாயக நாடுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ முடியும்.
மகாராஷ்டிரக் குளறுபடியை விரைவாக விசாரித்து, தவறிழைத்தவர்களைத் தண்டிப்பதும் மிகமிக முக்கியம். அதுதான் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களிடையே வளர்க்க உதவும்.