

வன்முறைச் சம்பவங்களால் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது அசாம் மாநிலம். போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.) அமைப்பின் ஒரு பிரிவான, என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பு, பழங்குடியினர் மீது கடும் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இதில் சோனித்பூர், கோக்ராஜார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் இதுவரை 78 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
இவர்களில் 5 மாதக் குழந்தை, சிறுவர்கள், பெண்களும் அடக்கம். கடந்த சில மாதங்களில், இந்தியா பூட்டான் எல்லையில் உள்ள போடோ பிரதேச பகுதிகளில், பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதல்களில் இந்த அமைப்பைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதுடன், பலர் கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் விதமாக என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பு பதில் தாக்குதல்கள் நடத்தும் என்று, உளவுத்துறை தகவல் தந்திருப்பதை அசாம் டி.ஜி.பி. முன்பே குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இந்த எச்சரிக்கையை அசாம் முதல்வர் தருண் கோகய் அலட்சியம் செய்ததால்தான் இந்தச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த வன்முறைச் சம்பவங்களால் பழங்குடியின மக்களிடையே அவநம்பிக்கையும் அடக்க முடியாத கோபமும் எழுந்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பழங்குடியினருக்கும் போடோ இனத்தவருக்கும் இடையில் பெரும் மோதல்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதால், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அசாம் மாநில நிர்வாகத்துக்கு இருக்கிறது.
அத்துடன் தனி போடோலாந்து வேண்டும் என்ற கோரிக்கையை முகமூடியாகப் பயன் படுத்திக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் இதுபோன்ற அமைப்புகளைக் கட்டுப்படுத்த, போடோ மக்கள் கோரும் வளர்ச்சி, அங்கீகாரம் ஆகிய நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும். பல காலமாக அநீதியைச் சந்தித்துவரும் அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தாலே, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் அமைப்புகள் தார்மிகரீதியாக பலமிழந்துவிடும்.
அத்துடன் போடோ மக்களுக்கும் பிற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குறிப்பாக சந்தால்கள் போன்ற பழங்குடியினத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிரிவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தவிர, தற்போது பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருக்கும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி ஆகிய அமைப்புகளுடனான பேச்சுவார்த்தையில் அரசு அக்கறையுடனான முனைப்புடன் ஈடுபட வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்துவரும் அசாம் மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும்தான் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்திருந்தன. இப்போது மீண்டும் பிரச்சினை தலைதூக்கியிருப்பது அச்சத்தைத் ஏற்படுத்துகிறது.
என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பினருடன் எந்த விதப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியுடன் கூறியிருக்கிறார். மாநில அரசுக்கு உதவியாக, தேவையான பாதுகாப்புப் படைகளை அசாமுக்கு அனுப்பி, பதற்றத்தைத் தணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் பொதுச் சமூகமும் வட கிழக்குப் பிராந்தியங்களின் மீது தொடர்ந்து பாராமுகமாக இருப்பது அவர்களை மைய நீரோட்டத்தில் சேராமலே தடுத்துவிடுகிறது. வட கிழக்கில் உருவாகும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இதுதான் காரணம். நம் பார்வையைக் கொஞ்சம் வடகிழக்குத் திசையை நோக்கித் திருப்பினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.