Published : 02 Dec 2014 08:59 AM
Last Updated : 02 Dec 2014 08:59 AM

எங்கே அந்த ஒரு கோடி பெண்கள்!

அதிரவைக்கிறது, யுனிசெஃப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை. 2007-லிருந்து இந்த ஆண்டு வரை இந்தியா இழந்த பெண் குழந்தைகள், பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் இருக்கலாம் என்கிறது யுனிசெஃப்பின் அந்த அறிக்கை. உலக அளவில் 161 நாடுகளின் மக்கள்தொகை ஒரு கோடிக்கும் குறைவு என்பதைப் பார்க்கும்போது, இந்த விபரீதத்தின் தீவிரம் மேலும் உறைக்கிறது.

இதற்கிடையே, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்தப் பிரச்சினை தொடர்பாகத் தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவை விசாரித்தபோது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கடமையிலிருந்து தவறிவிட்டன என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆண்/பெண் கருவைப் பகுத்தறியும் சோதனைக்கூடங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கவும் பெண் குழந்தைகள் பிறக்காமல் கருவிலேயே அழித்துவிடும் கொடுஞ்செயலைத் தவிர்க்கவும் அரசுகள் தவறிவிட்டன என்றும் சாடியிருக்கிறது.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் கேட்டால் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையையே ஏன் அடிப்படை அலகாக அரசு காட்ட வேண்டும், 2014-ல் என்ன விகிதம் என்ற கேள்விக்கு ஏன் நேரடியாகப் பதில் தரப்படவில்லை என்றும் அமர்வு கேட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விகிதாச்சாரத்தை அறியும் வழிவகை காணப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.

மேலும், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைப் பரிசோதித்துத் தெரிவிக்கக் கூடாது என்று 1994-ல் சட்டம் இயற்றிய பிறகு, அதை மீறியதற்காகக் குற்றச்சாட்டுப் பதிவுகளுக்கு உள்ளானோர் எத்தனை பேர், தண்டனை பெற்றோர் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரத்தை அரசு வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. கருவிலே பெண் சிசுக்கள் கொல்லப்படுவதைப் பெருமளவில் தடுக்கத் தவறிய மாநிலங்கள், இது தொடர்பான தகவல்களை டிசம்பர் 10-க்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

ஆண்/பெண் குழந்தைகளுக்கு இடையிலான விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதை அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களும் அதிரவைக்கின்றன நம்மை. 1991-ல் 1,000 ஆண்களுக்கு 945 பெண்கள் என்று இருந்த விகிதம் 2001-ல் 927 ஆகவும், 2011-ல் 918 ஆகவும் குறைந்திருப்பதை என்னவென்று சொல்வது? பெண் சிசுக்களைக் கருவிலும், பிறந்த பிறகும் கொல் வதைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டங்கள் வந்த பிறகுதான் விகிதாச்சாரம் மேலும் சரிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினையில் வேறு பரிமாணங்கள் புலப்படுகின்றன. பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோருக்கு உதவும் வகையிலான மருத்துவத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தையும், அறம் தவறிய மருத்துவத்தின் பெருக்கத்தையும் தவிர, வேறெந்தக் காரணத்தைச் சொல்ல முடியும்?

நம் சமூகம் எந்த அளவுக்கு ஆணாதிக்கச் சமூகமாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் பெண்சிசுக் கொலை. திருமணத்துக்கு உரிய சுமையாகவும், போகத்துக்கு உரிய பொருளாகவும் மட்டுமே பெண்களைப் பார்க்கும் பார்வை நம்மிடமிருந்து முற்றிலும் நீங்காத வரை இந்தப் படுகொலைகளை எந்த சட்டத்தாலும் தடுத்து நிறுத்தவே முடியாது என்பதுதான் உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x