Published : 04 Dec 2014 09:37 AM
Last Updated : 04 Dec 2014 09:37 AM

நட்பின் எல்லை விரியட்டும்!

வங்க தேசத்துடனான எல்லைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நிலப் பகுதிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்த, உத்தேச யோசனை சரிதான் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதை வரவேற்கத் தக்க மனமாற்றம் என்றே பாராட்ட வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேலும் வலுப்படுத்தவே இந்த முடிவு உதவும். இதற்கான அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதும் எளிது. வங்கதேசத்தில் இந்தியாவுடன் தோழமையுள்ள பிரதமரும் அரசும் இருக்கும்போதே இதைத் தீர்த்துக்கொள்வது பிரச்சினை தொடராமல் இருக்க வழிவகுக்கும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்றபோது ‘கிழக்கு பாகிஸ்தான்’ என்று அழைக்கப்பட்ட பகுதியுடனான நில எல்லை, சர்ச்சைக்கிடமான வகையில் பிரிக்கப்பட்டது. இந்திய நிலப் பகுதிக்குள் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சொந்தமான நிலத் திட்டுகளும், கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்தியப் பகுதித் திட்டுகளும் சிக்கின. இதனால், பரஸ்பரம் இரு நாடுகளுமே எந்த வகையிலும் நிர்வகிக்க முடியாத தீவுத் திட்டுகள் பல ஏற்பட்டுவிட்டன.

அந்தப் பகுதி மக்களுக்குச் சாலை வசதி, மின்சார வசதி, மருத்துவமனை, கல்வி நிலையங்கள், குடிநீர் வசதி என்று எதையுமே செய்ய முடியாமல் இரு நாடுகளுமே தவித்தன. வேலைவாய்ப்புகளையும், எந்த ஒரு நாட்டின் சட்டப்படியான உரிமைகளையும் பெற முடியாமல், எந்த நாட்டாலும் சொந்த மக்களாகப் பார்க்கப்படாமல் வேற்றுக் கிரகவாசிகளைப் போலவே இந்தத் திட்டுவாசிகள் தனித்து விடப்பட்டார்கள். இந்தியாவுக்குச் சொந்தமான 111 நிலத் திட்டுகள்: 17,160 ஏக்கர், அதாவது 70 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ளவை, வங்கதேச நில எல்லையால் சூழப்பட்டுள்ளன. வங்கதேசத்துக்குச் சொந்தமான 51 நிலத் திட்டுகள்: 7,110.02 ஏக்கர், அதாவது 28 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ளவை, இந்திய நில எல்லையால் சூழப்பட்டுள்ளன. இந்த நிலத் திட்டுகளைப் பரஸ்பரம் ஒப்படைத்துக்கொள்வதன் மூலம், வங்கதேசத்துக்கு 2,267 ஏக்கர் அதாவது 9 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நிலம் கிடைக்கும். இந்தியாவுக்கு 2,777 ஏக்கர் அதாவது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நிலம் கிடைக்கும்.

அதைவிட முக்கியம், வங்கதேச நிலப் பகுதிக்குள் சிக்கிவிட்ட 37,000 இந்தியர்கள் இந்திய நில எல்லைக்குள் குடிவருவார்கள். இந்திய நிலப் பகுதிக்குள் வசிக்கும் 14,000 பேர் இந்தியாவுடனோ, வங்கதேசத்துடனோ சேர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்கள் அனைவருமே இந்தியாவில் சேர விரும்பினாலும் அரசு அனுமதிக்க வேண்டும். நில எல்லைப் பரிமாற்றமும் மக்கள் பரிமாற்றமும் சுமுகமாகவும் விரைவாகவும் பிரச்சினை ஏதுமில்லாமலும் நடைபெற வேண்டும்.

வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்துவதுடன், அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் இந்தியா ஆக்கபூர்வமாக உதவுதன் மூலம் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் நிழலில் இளைப்பாற வேண்டிய அவசியம் அந்நாட்டுக்கு இல்லாமல் போகும். மோடியின் இந்த மனமாற்றம் தெற்காசிய ஒற்றுமை வலுப்பட உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x