வெற்று கோஷங்கள் காப்பாற்றாது!

வெற்று கோஷங்கள் காப்பாற்றாது!
Updated on
1 min read

சாரதா நிதி நிறுவன ஊழலில் சிக்கியதால், திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சி.பி.ஐ. வளையத்துக்குள் வந்திருப்பதால், மேற்கு வங்க முதல்வரும் அந்தக் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கோபமடைந்திருக்கிறார். மத்திய அரசும் பாஜகவும் அரசியல் உள்நோக்கத்துடன் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவுசெய்வதாகச் சித்தரிக்க அவர் முயல்கிறார்.

சாரதா நிதி நிறுவன ஊழலில் தொடர்பிருப்பதாக மேற்கு வங்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா கைதுசெய்யப் பட்டிருப்பதால் அதிருப்தியடைந்திருக்கும் மம்தா, ‘மதன் மித்ரா குற்றமற்றவர்’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார். அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள ஒட்டுமொத்த விசாரணையையும் களங்கப்படுத்தும் அளவுக்கு அவர் போய்விட்டார்.

மம்தா சொல்வதுபோல், சாரதா குழுமத்தின் தலைவர் சுதிப்தோ சென்னுடன் புகைப்படத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக மதன் மித்ரா கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் வலுவானவை. நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடுசெய்த பணத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

ஆனால், “புகைப்படத்தில் சுதிப்தோ சென்னுடன் இருந்ததாகக் காரணம் காட்டி மதன் மித்ராவைக் கைதுசெய்ய முடியும் என்றால், மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயுடன் புகைப்படத்தில் இருப்பதைக் காரணம் காட்டி, பிரதமர் மோடியையும் கைதுசெய்ய வேண்டும்” என்று மம்தா கூறுகிறார். இதுபோன்ற பேச்சுகள், வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களைச் சிக்கலிலிருந்து விடுவிக்காது.

திரிணமூல் காங்கிரஸ் சொல்வதுபோல, பாஜக இந்தப் பிரச்சினையை அரசியல் உள்நோக்கத்தோடு அணுகுகிறது எனும் குற்றச்சாட்டும் நிராகரிக்க முடியாதுதான். திரிணமூல் காங்கிரஸை வேரறுக்கப்போவதாக அமித் ஷா சூளுரைத்திருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. எனினும், மம்தா இந்தப் பிரச்சினையை அணுகும் விதத்தை அதனாலேயே நியாயப்படுத்திவிட முடியாது.

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது, மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது, வெற்று கோஷங்களை முழங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் அதிலிருந்து வெளிவர முடியாது. தனது கட்சியின் உறுப்பினர், தீவிரமான விசுவாசி என்ற காரணத்துக்காக ஒரு மாநிலத்தின் முதல்வர், ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பது சரியல்ல. மதன் மித்ரா குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கும் வரை மம்தா பொறுத்திருப்பதே சரியானதாக இருக்கும்.

ஊழல் குற்றச்சாட்டைச் சட்டபூர்வமாக எதிர்கொள்வதும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும்தான் மம்தா செய்ய வேண்டியவை. அப்படிச் செய்தால்தான் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். வெற்றுப் பேச்சுகளாலோ கோஷங்களாலோ அல்ல!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in