Published : 22 Dec 2014 09:35 AM
Last Updated : 22 Dec 2014 09:35 AM

உலக அமைதிக்கு ஒரு பூங்கொத்து!

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவுடன் தூதரக உறவுகளை மீண்டும் வைத்துக்கொள்ளப்போகிறது அமெரிக்கா. நட்புறவை நோக்கி இரண்டு நாடுகளும் நகர்ந்ததற்கு கியூப அதிபர் ரவுல் காஸ்ட்ரோ, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகிய இருவரையுமே பாராட்டியாக வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீராக்க கத்தோலிக்க தலைமைப் பீடமான வாடிகனும் கனடா நாடும்தான் முன்முயற்சிகளை எடுத்தன. சுமார் 2 ஆண்டுகளாகத் திரைமறைவில் நடந்த பேச்சு களுக்கு இப்போது பலன் ஏற்பட்டிருக்கிறது.

ஒபாமா இந்த முடிவை எடுத்திருந்தாலும் அமெரிக்க நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் தருவது கடினம்தான். குடியரசுக் கட்சியினர்தான் இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலுப் பெற்றிருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் செல்வாக்கு இப்போது அமெரிக்காவில் குறைந்திருக்கிறது. கியூபாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டதும் அதை எதிர்த்து அமெரிக்காவில் குடிபுகுந்த அதிருப்தியாளர்கள் ஏராளம். அவர்கள் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள். கியூபாவில் இன்னமும் கம்யூனிச ஆட்சி நடப்பதால், அந்த நாட்டுடன் அமெரிக்கா சுமுக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துவது அவர்கள்தான்.

ஃபிடல் காஸ்ட்ரோ 1959-ல் கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றினார். கம்யூனிச ஆட்சியை நிறுவினார். நாட்டின் அனைத்து வளங்களையும் தேச உடமையாக்கினார். அவரது அரசைக் கவிழ்க்க அமெரிக்க அரசு எத்தனையோ வழிகளில் முயன்று தோற்றது. கியூபாவுக்கு ஆதர வாக சோவியத் யூனியன் இருந்தது. இதனால், கியூபாவுடனான தூதரக உறவு உட்பட அனைத்துத் தொடர்புகளையும் அமெரிக்கா தானாக ரத்துசெய்தது. அதுமுதல் சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையாக எதிர்த்தே வந்திருக்கின்றன.

சோவியத் யூனியன் பிளவுபட்டதும் கியூபாவுக்கு சோவியத் யூனியன் அளித்துவந்த மானியங்கள் நின்றுவிட்டன. கடும் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டது. 2008-ல் ஃபிடல் காஸ்ட்ரோ அதிபர் பதவியிலிருந்து விலகினார். அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோ அதிபர் ஆனார். கால மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் எடுத்துவருகிறார். ராஜதந்திர அணுகு முறையிலும் சில மாற்றங்களைச் செய்தார். அதன் அடுத்த கட்டம்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. வர்த்தக உறவை வலுப்படுத்தவும் பரஸ்பரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்து பரிமாறிக்கொள்ளவும் முதல் கட்டத்தில் அவர் முக்கியத்துவம் தந்தார். ஒபாமாவும் அதற்கேற்ப எதிர் நடவடிக்கைகளை எடுத்தார்.

கியூபாவின் அரசியல், பொருளாதார நடைமுறைகளில் மாற்றம் செய்ய மாட்டோம், அமெரிக்காவையும் அதே மாதிரி கோரவும் மாட்டோம் என்று உறுதியளித்துள்ள ரவுல் காஸ்ட்ரோ, தங்கள் நாட்டுக்கு எதிரான வர்த்தகத் தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவுக்குக் கோரிக்கை விடுத்தார். கியூபாவுடன் உறவுகொள்ள அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி அளிக்காவிட்டாலும், தனக்குள்ள சிறப்பு அதிகாரங்களை ஒபாமா பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

பக்கத்தில் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் எவ்வளவு நாள்தான் வெறுத்துக்கொண்டிருப்பது? உலக நாடுகள் பெரும்பாலானவற்றை ஏகாதிபத்தியம் சூறையாடிக்கொண்டிருக்கும் காலத்தில், அமெரிக்கா-கியூபா நட்பு சாத்தியமாவாது உலக அமைதிக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x