Published : 03 Dec 2014 08:43 AM
Last Updated : 03 Dec 2014 08:43 AM

போபால்: மறதி எனும் கொடிய நச்சுப்புகை

அந்தப் புகைப்படத்துக்கு வயது 30. ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு இரண்டு வயதுகூட இருந்திருக்காது. விஷவாயுவால் மரணமடைந்த எண்ணற்ற உயிர்களில், பெயர் தெரியாத அந்தக் குழந்தையும் அடக்கம். உலகின் ‘புகழ்’பெற்ற 10 புகைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் புகைப்படம், இந்தியாவில் நடைபெற்ற ஒரு கொடிய படுகொலையின் (விபத்தென்று எப்படிச் சொல்வது?) நினைவுச்சின்னமாக ஆகிவிட்டது.

1984-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதியின் நள்ளிரவில் தொடங்கியது அந்தப் பேரழிவு. பூச்சிமருந்து உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட விபத்தில், வெளியான மீத்தைல் ஐசோசயனைடு நிகழ்த்திய கோரதாண்டவம்தான் அந்தப் பேரழிவு. 3,787 பேர் மரணமடைந்தார்கள் என்றும், 5,50,000 பேர் கடும் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்கள் கொடுத்திருந்தது. ஆனால், அதிகாரபூர்வமற்ற கணக்குகள் தெரிவிக்கும் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம். கிட்டத்தட்ட குட்டி ஹிரோஷிமாவே நிகழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஹிரோஷிமாவைப் போலவே இன்னும் போபாலில் பின்விளைவுகள் கடுமையாகத் தொடர்வதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் போபால் பேரழிவு என்பது வெறும் செய்தியாக மாறி நினைவுகளின் ஒரு மூலையில் புதைந்துபோனதுதான் பெருந்துயரம்.

இதுபோன்ற பேரழிவுகளுக்கும் சரி, சிறு விபத்துக்களுக்கும் சரி, எளிய இலக்காவது ஏழை மக்கள்தான். இந்தியாவில் ஏழைகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. பெரும்பாலான விபத்துக்களும் பேரழிவுகளும் அரசுகளின், நிர்வாகங்களின் அலட்சியத்தால்தான் நடைபெறுகின்றன என்பதற்கு போபாலைவிடப் பொருத்தமான உதாரணம் இன்னொன்று இருக்க முடியாது. எந்தத் தீங்குமற்ற தொழிற்சாலை என்றும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தரும் என்றும் தொடங்கப்பட்ட ஒரு தொழிற்சாலை, இறுதியில் மக்களுக்கு மரணத்தையும் தொடர் பாதிப்புகளையுமே அள்ளித்தந்தது.

உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும் அதில் இருந்த ரசாயனங்கள் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டுகளைப் போன்றவை. உற்பத்தி இல்லாத தொழிற்சாலைக்குத் தீவிர பராமரிப்பு அநாவசியம் என்று கருதிய நிர்வாகத்தையும், அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையில் என்னென்ன ரசாயனப் பொருட்களை வைத்திருக்கிறார்கள், அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும், சரியான பராமரிப்பு நடைபெறுகிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பாத அரசையும் தவிர, போபால் பேரழிவுக்கு யார் காரணமாக இருக்க முடியும்? அங்கே பணிபுரிந்த ஊழியர்களுக்குக்கூட அங்கே வைக்கப் பட்டிருந்த பொருட்களின் அபாயத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சரிவரத் தெரிவிக்கப்படவில்லை என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும், அணுஉலைகள் உட்பட.

போபாலுக்கு முன்னும் பின்னும் ஏராளமான தொழிற்சாலை விபத்துக்கள் இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், போபால் அளவு ஒரு தொழிற்சாலைப் பேரழிவு இந்திய வரலாற்றில் வேறெதுவும் கிடையாது.

அப்படிப்பட்ட பேரழிவுக்குப் பிறகும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனில், வேறு எதற்குத்தான் இங்கே நீதி கிடைக்கும்? அப்படிப்பட்ட ஒரு பேரழிவுக்குப் பிறகும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனில், வேறு எப்போதுதான் நாம் பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x