Published : 01 Dec 2014 08:48 AM
Last Updated : 01 Dec 2014 08:48 AM

உரையாடல்தான் ராஜதந்திரம்

நேபாளத்தில் நடந்து முடிந்த சார்க் அமைப்பின் மாநாடு பெயரளவுக்கு ஒருசில ஒப்பந்தங்களைச் செய்துகொண்டதோடு, பெரிய முன்முயற்சிகளோ புதிய திட்டங்களோ இல்லாமல் சம்பிரதாயமாக முடிந்துவிட்டது. இந்த அமைப்பிலேயே மிகப் பெரிய நாடான இந்தியாவும் அதன் பிரதமர் நரேந்திர மோடியும்தான் இதற்குக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பி, அவர்கள் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டபோது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் மோடி. தெற்காசிய நாடுகளுக்கிடையில் மோடி இணக்கத்தை ஏற்படுத்துவார் என்றே பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான்–இந்தியா பிரச்சினையின் எதிரொலியால் சார்க் மாநாடு களையிழந்து காணப்பட்டது என்றே கூற வேண்டும். இந்தியத் தரப்பில் பாகிஸ்தான் மீது கடும் கோபம் இருந்தாலும் அதைவிட சமாதானம் மிகவும் முக்கியமானது அல்லவா?

பர்வீஸ் முஷாரபைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்த வாஜ்பாயை மோடி நினைவூட்டுகிறார். சார்க் மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை சம்பிரதாயமாகக்கூட நலம் விசாரிக்காமலும் ஏதும் பேசாமலும் முகம்கொடுக்காமலும் தவிர்த்திருக்கிறார் மோடி. தேசங்களின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் விருப்புவெறுப்புகளைக் காட்டிக்கொள்வது தேச நலன்களுக்குப் பாதகமாகியிருப்பதை வரலாறு நமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது.

சார்க் அமைப்பிலேயே மிகப் பெரிய நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும்தான். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இந்த நாடுகள் இரண்டும் முட்டிக்கொண்டிருப்பது தெற்காசியாவுக்கு நல்லதல்ல. எனவே, இந்தியா தன்னுடைய நிலையை மறுபரிசீலனை செய்வது அவசியம். காஷ்மீர் பிரச்சினை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தாலும் நாம் பேசியாக வேண்டியது பாகிஸ்தானிடம்தான் என்பதில் மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவுகள், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. அழைத்தால் வரக்கூடிய நாடுகளாக ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், மோரிஷஸ், மியான்மர், தென்கொரியா, அமெரிக்கா போன்றவை உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினராகச் சேர சீனா விரும்புகிறது. அதை இந்தியா எதிர்த்ததால் இந்த மாநாட்டில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானும் இலங்கையும் சீனாவுக்கு மிக நெருக்கமான நாடுகளாகத் திகழ்கின்றன. இதர நாடுகளையும் வளைப்பதற்கு சீனா திட்டமிட்டுக் காய்களை நகர்த்துவதாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்து கிடைக்கக் கூடாது என்று சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து எதிர்க்குரல் கொடுத்துவருவதற்குப் பதிலடியாக சார்க் அமைப்பில் சீனாவைத் தடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கருத இடமிருக்கிறது.

உலகின் மொத்த நிலப்பரப்பில் 3% மட்டுமே சார்க் நாடுகளிடம் உள்ளது. ஆனால், உலக மக்கள்தொகையில் 21%-ஐ சார்க் நாடுகள் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பு ஆசியான், பிரிக்ஸ், ஜி-20 அமைப்புகளைவிட வலுப்பெறுவதும் உயிரோட்டத்துடன் இருப்பதும் அவசியம். அதற்கு இந்தியாதான் முன்முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் சார்க் அமைப்பும் கூடிக் கலைகிற சம்பிரதாயமான அமைப்பாகவே சுருங்கிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x