Published : 06 Dec 2014 09:04 AM
Last Updated : 06 Dec 2014 09:04 AM

சின்ன ஓட்டைகளும் ஓடத்தை மூழ்கடிக்கும்!

தமிழக மக்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது மின் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்ற தகவல். ஏழைகள், குறைந்த பயன்பாட்டாளர்கள் அச்சப்படத் தேவை யில்லை என்று ஆளுங்கட்சி வட்டாரங்களும் மின் துறை அமைச்சரும் உறுதியளித்தாலும் மக்கள் மனதில் நிம்மதி ஏற்படவில்லை.

தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கும் மின்சாரத் தேவைக்குமான இடைவெளி தொடர்ந்து நீடிக்கிறது. 2012-13-ல், 67,208 மில்லியன் யூனிட் என்றிருந்த தமிழகத்தின் மின் தேவை 2013-14-ல் 76,445 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 14% அதிகம். 2014-15-ல் நம்முடைய தேவை 91,642 மில்லியன் யூனிட்களாக இருக்கும். அதாவது, முன்பைவிட 20% அதிகம் இருக்கும் என்கிறார் மின்துறை அமைச்சர். கடுமையான மின் பற்றாக்குறையைக் குறைக்க முன்னெடுக்கப்பட்ட மின்உற்பத்தித் திட்டங்கள் இன்னமும் நிறைவடையாத சூழலில், சொந்த மின்உற்பத்தி மற்றும் மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களின் மூலமாக 70% தேவையையே தமிழகத்தால் பூர்த்திசெய்துகொள்ள முடிகிறது. ஏனைய 30% தேவையை நாம் வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்கியே பூர்த்திசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படி வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பாக, அரசு தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும். அப்படி எடுக்கப்படும் கொள்கை முடிவு, தனியார் உற்பத்தியாளருக்கும் கையைக் கடிக்காமல், மின்வாரியமும் பாதிக்கப்படாமல் ஒரு நியாயமான விலை நிர்ணயத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடமிருந்தும் லான்கோ என்ற தனியார் நிறுவனத்திடமிருந்தும் ஒரு யூனிட் ரூ. 5.14 என்கிற விலையில் அரசு மின்சாரத்தை வாங்குகிறது. இதேபோல, வேறு சில தனியார் நிறுவனங்களிடமிருந்தும் ரூ. 4.91 என்ற அளவிலான விலையில் மின்சாரத்தை அரசு வாங்குகிறது. ஆனால், குறிப்பிட்ட 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ரூ.12.50 என்ற விலைக்கு ரூ. 3,687.50 கோடி கொடுத்து வாங்குவதாக வெளியாகும் தகவல்கள் அதிரவைக்கின்றன.

சட்டப் பேரவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். முந்தைய திமுக அரசைச் சுட்டிக்காட்டி அவர் அளித்திருக்கும் விளக்கங்கள் திருப்தி அளிப்பதாக இல்லை. கடந்த அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகத்தானே இந்த அரசை ஆட்சிப் பீடத்தில் மக்கள் உட்கார வைத்திருக்கிறார்கள்? இப்படி ஆங்காங்கே யாருக்கும் தெரியாமல் விழும் ஓட்டைகள் பின்னாளில் நிறுவனங்களை நஷ்டக் கணக்கை நோக்கித் தள்ளுகின்றன. மக்களுக்கு மின்விநியோகம் முக்கியம். அந்த விநியோகம் விநியோக அமைப்பை நஷ்டப்படுத்திவிடாமல் இருப்பதும் முக்கியம்!

இந்த நேரத்தில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி மக்களிடையே அரசு பிரச்சாரம் மேற்கொள்வதும் நல்ல விளைவுகளைத் தரும். அதேசமயம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலான மாற்றுமுறை மின்சாரத் தயாரிப்பிலும் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டிய சமயம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x