

நாடு முழுவதற்கும் பொதுவாக ஒரே சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதற்கான அரசியல் சட்ட (122-வது திருத்த) மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த தொடரில்தான் இதை நிறைவேற்ற அரசு நடவடிக்கைகளை எடுக்கும். 2016 ஏப்ரல் முதல் இதை அமலுக்குக் கொண்டுவர அரசு உத்தேசித்திருக்கிறது.
இந்தப் பொது வரியால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால், அதை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஈடுகட்டும் என்று அரசியல் சட்டபூர்வமாகவே உறுதி அளிக்கப்படுகிறது. முதல் 3 ஆண்டுகளுக்கு முழுமையான இழப்பீடு இருக்கும்.
பெட்ரோலியப் பண்டங்கள், புகையிலை உட்பட பெரும்பாலான சரக்குகளும் சேவைகளும் இந்த சரக்கு, சேவை வரிச் சட்டத்தின் வரம்புக்குள் வருகின்றன. அதே சமயம், பெட்ரோலியப் பண்டங்களை முழுக்க முழுக்க மத்திய அரசின் வரம்பில் கொண்டுவருவதற்கான நாள், மாநில அரசுகளுடன் ஆலோசனை கலந்த பிறகு இறுதி செய்யப்படும். சேவை வரி விதிப்பு முழுக்க முழுக்க இப்போது மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. இனி, அது மாநிலங்களுடனும் பகிர்ந்துகொள்ளப்படும்.
மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தின்போது, சரக்குகள் மீது கூடுதலாக ஒரு சதவீத வரி விதிக்கப்படும். இதை மத்திய அரசு வசூலிக்கும். ஆனால், இந்த வரி வருவாய் எந்தெந்த மாநிலங் களிலிருந்து வருகிறதோ அவற்றுக்கே பிரித்து வழங்கப்படும். நாடு முழுவதற்கும் பொது வரி விதிக்கப்படுவதால் தொழில்களும் சேவை களும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெறும் ஆபத்து நீங்கிவிடும்.
சமீப காலமாக, தமிழ்நாட்டில் சிகரெட் மீது அதிக வணிக வரி விதிக்கப்படுவதால், பக்கத்து மாநிலங்களிலிருந்து சிகரெட்டுகளைக் கடத்திவந்து தமிழ்நாட்டில் விற்பது அதிகரித்துள்ளது. சரக்கு, சேவை வரி நாடு முழுவதற்கும் பொதுவாகிவிட்டால், இதுபோன்ற முறைகேடு களும் சரி, வர்த்தக இழப்புகளும் சரி எந்த மாநிலத்துக்கும் ஏற்படாது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சி ஏற்பட இது நல்ல காரணியாக அமையும்.
பொது சரக்கு, சேவை வரி முறைக்கு மாறினால், உடனடியாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் உயர்ந்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய சட்டம் அமலுக்கு வந்தால் வரி விகிதம் குறையும், வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5 மடங்கு முதல் 6 மடங்கு வரை, அதாவது 500% முதல் 600% வரை அதிகரிக்கும்.
‘1947-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செய்யப்பட்ட வரி சீர்திருத்தங்களில் மிகப் பெரிய புரட்சி இதுவே’ என்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. புரட்சியை விட புரட்சிக்குப் பிறகான நடைமுறையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதே மிகவும் முக்கியம். மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டிய இடம் அதுதான்.