Published : 08 Nov 2014 09:01 AM
Last Updated : 08 Nov 2014 09:01 AM

காஷ்மீர் மக்களை வெல்வது எப்படி?

காஷ்மீரைச் சேர்ந்த 2 பள்ளிக்கூட மாணவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றிருப்பது, ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரம்’ ராணுவத்துக்கு எந்த அளவுக்குத் துணிச்சலைக் கொடுக்கிறது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு.

காஷ்மீரின் சதூராவைச் சேர்ந்த 5 மாணவர்கள் மொகரம் ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு வருவதற்காக, திங்கள்கிழமை மாலை ஒரு காரில் சென்றுள்ளனர். வழியில் ஒரு டிப்பர் லாரி மீது சிறுவர்கள் சென்ற கார் உரசிவிட்டது. அந்த டிரைவர் கோபமாகத் திட்டியதால், பின்தொடர்ந்து வந்துவிடப்போகிறாரே என்ற அச்சத்தில் காரை வேகமாக ஓட்டியிருக்கிறார்கள். வழியில் ராணுவத்தினர் காரை நிறுத்துமாறு சைகை செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே, லாரியை இடித்துவிட்டது மட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தால் அச்சத்தில் இருந்த சிறுவர்கள் காரை நிறுத்தினால் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சி, நிறுத்தாமல் சென்றிருக்கிறார்கள்.

இப்படி, 2 இடங்களில் ராணுவ வீரர்களைக் கடந்து 3-வது இடத்தின் அருகே சென்றபோது 53-வது ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் காரில் இருந்தவர்களைப் பார்த்துச் சரமாரியாகச் சுட்டிருக்கிறார்கள்.

காரை ஓட்டிய ஃபைசல் அகமதுவும் (14) மெஹ்ராஜுதீனும் (22) உயிரிழந்தார்கள். வேறு இருவர் காயம் அடைந்தனர். பாசிம் அகமது (14) என்ற சிறுவன் காயமின்றி உயிர்தப்பினான்.

காரிலிருந்து இறங்கி அங்கிருந்த ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்து அந்தச் சிறுவன் தப்பியிருக்கிறான். “காரை நிறுத்தும்படி ராணுவத்தினர் கூறியது எனக்குக் கேட்டது; ஆனால், வண்டியை ஓட்டிய ஃபைசல் பதற்றத்தில் இருந்ததால் அவனுக்குக் கேட்டிருக்க முடியாது” என்று அந்தச் சிறுவன் பேட்டியளித்திருக்கிறான். ராணுவம் கூறியபடி சோதனைச் சாவடிகளெல்லாம் அங்கே இல்லை என்றும், சில ராணுவ வீரர்களே வீதியில் நின்றிருந்தார்கள் என்றும் அந்தச் சிறுவன் தெரிவித்திருக்கிறான்.

காரிலிருந்த பயங்கரவாதிகள் தங்களை நோக்கிச் சுட்டதாகவும் பதிலுக்குத் தாங்கள் திருப்பிச் சுட்டதாகவும் ராணுவத்தினர் முதலில் தெரிவித்திருந்தனர். காரிலோ இறந்தவர்களிடமோ ஆயுதங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. அவர்கள் நிராயுதபாணிகள் என்பதை, உயிர் தப்பிய சிறுவனின் பேட்டியும் உறுதி செய்தது. இப்போது ‘‘ராணுவ வீரர்கள் தவறிழைத்துவிட்டனர்; இனி இப்படி நடக்காது. இச்சம்பவம் குறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடக்கும்’’ என்று ராணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ என்ற கேடயத்தைக் கொண்டு, காஷ்மீரில் இந்திய ராணுவம் இப்படித்தான் பலமுறை நடந்துகொண்டிருக்கிறது; ராணுவத்தினர் யாரைக் கைதுசெய்தாலும் சித்திரவதை செய்தாலும் கொன்றாலும் அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரிக்க முடியாது. இந்தச் சட்டத்தை எதிர்த்துத்தான் மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளாவும் 15 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார். நியாயமான காரணங்களுக்காக ஆயுத வழியிலிருந்து அகிம்சை வழி வரை எல்லா முறையிலும் போராடிப் பார்த்துவிட்ட மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டுமென்று அரசு உண்மையிலேயே விரும்புமானால், ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ உள்ளிட்ட ஜனநாயகத்துக்குப் புறம்பான சட்டங்களைக் கொண்டல்ல, அந்த மக்கள் மீது காட்டும் அக்கறையைக் கொண்டே அதைச் சாதிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x