Published : 11 Jul 2019 10:18 am

Updated : : 11 Jul 2019 10:18 am

 

ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு வலுசேர்க்கட்டும்

நீதிமன்றத் தீர்ப்புகளின் விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக சட்டத் திருத்தங்களைச் செய்வது பொதுவாக நல்ல விஷயமாகக் கருதப்படுவதில்லை. எனினும், சில சந்தர்ப்பங்களில் மக்கள் நலனை முன்னிட்டு விதிவிலக்காக நடந்துகொள்வதில் தவறும் இல்லை. மத்திய கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணி நியமனத்தை உத்தரவாதப்படுத்தும் வகையிலான மத்திய அரசின் மசோதாவை அப்படிப்பட்ட விதிவிலக்காகவே கருத வேண்டும்.

மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட அவசரச் சட்டத்துக்குப் பதிலாக இப்போது மக்களவையில் 'மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு) மசோதா' மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தையோ பல்கலைக்கழகத்தையோ ஒட்டுமொத்த அலகாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான் புதிய சட்டத்தின் நோக்கம்.

இடஒதுக்கீடு வழங்குவதில் ஒரு பல்கலைக்கழகத்தை ஒட்டுமொத்த அலகாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை மறுத்து, ஒரு பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் ஒரு அலகாகக் கொள்ளப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் 2017-ல் தீர்ப்பு வழங்கியிருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல்செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டம், அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை மீறாமல், ஆனால் வேறு வகையில் அதன் விளைவுகளை மட்டுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

இடஒதுக்கீட்டுக்குக் குறுகலான நிர்ணயம் இருந்தால் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர் ஆகியோர் குறைந்த அளவிலேயே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். சமூக நீதியின் மீது அக்கறை கொண்டு விரிவான அடிப்படையில் பணியிடங்கள் தீர்மானிக்கப்பட்டால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என்று ஒதுக்கப்படும் வாய்ப்பு உருவாகும். இடஒதுக்கீட்டில் சிறிய அலகை நிர்ணயித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஒரேயடியாகத் தவறு என்று சொல்லிவிட முடியாதுதான். ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகத்தையும் ஒரு அலகாகக் கொண்டால், சில துறைகளில் முழுக்க இடஒதுக்கீட்டுப் பிரிவினரும் சில துறைகளில் முழுக்கத் திறந்தநிலைப் பிரிவினரும் ஆக்கிரமிக்கக்கூடும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

2017-2018-க்கான யூ.ஜி.சி.யின் அறிக்கை மத்திய பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு உதவிப் பேராசிரியர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கிறது. சமீபத்தில் முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10% இடஒதுக்கீடு காரணமாக பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கலாம். அதேநேரத்தில், சமூகரீதியில் நலிவடைந்தோருக்கான வாய்ப்புகள் மேலும் குறுகக் கூடும். இந்நிலையில், புதிதாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டமானது சமூக நீதிக்குப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

You May Like

More From This Category

facts-to-know-about-kamaraj

காமராஜரை அறிவோம்

கருத்துப் பேழை

More From this Author