

ஜார்கண்டில் நடத்தப்பட்ட சமீபத்திய கும்பல் கொலை இந்தியாவின் பெயரை மீண்டும் சர்வதேச அரங்கில் உச்சரிக்கவைத்திருக்கிறது. மீண்டும் பதவியேற்ற பிரதமர் மோடி சர்வதேசப் பயணங்களில் இருக்கும் நிலையில், இந்தியாவின் பெயர் வெவ்வேறு காரணங்களோடு அவலமான ஒரு காரணத்துக்காகவும் உச்சரிக்கப்படுவது தேசிய அவமானம். கும்பல் கொலைகளுக்கு உடனடியாக தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமரின் அறிவிப்பு ஆறுதல் தருகிறது. ஆனால், அவர் வார்த்தைப்படி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் அமைப்பை மாற்றுவது மட்டுமே இந்த விவகாரத்தை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தும்.
மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக விசாரிக்கப் புறப்பட்ட கும்பல், எதிர்ப்பட்ட இளைஞரை சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தத் தொடங்கியது. அதன் பிறகு பெயரைக் கேட்டதும் அந்த இளைஞர் ‘தப்ரிஸ் அன்சாரி’ என்றிருக்கிறார். அவர் ஒரு முஸ்லிம் என்று தெரிந்ததும் அந்தக் கும்பலால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார். இடையிலேயே அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் ‘ஜெய் ஹனுமான்’ என்றும் கோஷமிட வைத்த அந்தக் கும்பல், அதைக் காணொலியாகப் பதிவுசெய்து சமூக ஊடகங்களிலும் பரவவிட்டிருக்கிறது.
இத்தகைய கும்பல் கொலைகள் சமீப காலமாக ஒரு போக்காக உருவெடுத்ததும், ஊடகக் கவனம் பெற்றுவருகின்றனவே தவிர, இந்தியா முழுக்க ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஒவ்வொரு வருடமும் கும்பல் கொலைகள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு முன் குழந்தைக் கடத்தல் என்ற பெயரில் நடத்தப்பட்ட கும்பல் தாக்குதல்களை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
கோழைத்தனமான இத்தகு வெறிச்செயலில் ஈடுபடுபவர்கள் நோய்க்கூறு மிக்க மனங்களைக் கொண்டவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; கோழைகளை அச்சம்தான் கட்டுப்படுத்த இயலும். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையும் சம்பந்தப்பட்ட மாநில அரசும் சமரசமின்றிப் பணியாற்ற வேண்டிய இடம் இது. ஆனால், இந்தியாவில் கும்பல் கொலைக் குற்றவாளிகளில் எத்தனை பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரங்களில் கவனம் செலுத்தும்போது ஏமாற்றமே ஏற்படுகிறது.
ஜார்கண்ட் விவகாரத்திலேயே காவல் துறைக்குத் தகவல் கிடைத்து அவர்கள் அங்கு சென்றபோது அன்சாரியை மீட்டார்களே தவிர, சட்டத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்ட கும்பலைக் கைதுசெய்ய முற்படவில்லை. அன்சாரி இறந்து, தேசிய அளவில் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கிய பிறகே பெயரளவிலான நடவடிக்கைகளும் தொடங்கின. அமைப்பு ஒரு அறுவை சிகிச்சைக்குத் தயாராவதன் வழியாகவே இதற்கு முடிவுகட்ட முடியும்.