Published : 02 Jul 2019 07:46 AM
Last Updated : 02 Jul 2019 07:46 AM

மராத்தாக்களுக்கான ஒதுக்கீடு எதை உணர்த்துகிறது?

மராத்தா சமூகத்தவருக்குக் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் மகாராஷ்டிர மாநில அரசு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேவேந்திர பட்நவீஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு இது நிம்மதியை அளித்திருக்கும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக யார் வழக்கு தொடுத்தாலும் எங்களையும் அழைத்து விசாரித்த பிறகே வழக்கை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மாநில அரசு உடனடியாக முடிவுசெய்திருப்பதிலிருந்தே இதை பாஜக அரசு எந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதிவந்திருக்கிறது என்பதை உணரலாம்.

மராத்தா சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டமன்றத்தில் பாஜக - சிவசேனை கூட்டணி அரசு கடந்த ஆண்டு சட்டம் இயற்றியபோது, இதற்கு நிறைய எதிர்ப்புகள் சட்டபூர்வமாக வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ‘சமூக, கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்ற புதிய பிரிவை உருவாக்கிய மாநில அரசு, அதற்கு 16% இடஒதுக்கீட்டை வழங்கியது. இது ஏற்கெனவே மாநிலத்தில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டு அளவைத் தாண்டியது. அதாவது, இந்த 16% ஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்த இடஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 68% ஆகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘இடஒதுக்கீடு 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தும் நிலையில், அரசின் இந்த முடிவு என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. மேலும், ‘பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்’ என்று இதுவரை ஒரு தொகுப்பின் கீழ் பல சாதிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், ஒரேயொரு சாதி அல்லது சமூகத்தை மட்டும் தனிப் பிரிவாகக் கருத முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உயர் நீதிமன்றம் தனது 487 பக்கத் தீர்ப்பில் விடை அளித்திருக்கிறது. ‘50% என்ற அளவை மீற, அசாதாரணமான சூழலும் விதிவிலக்கான நிலைமைகளும் நிலவுகின்றன’ என்று இத்தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பலத்த விவாதத்தையும் உருவாக்கவிருப்பது உறுதி. ஏனென்றால், சமூகத்திலும் அரசியலிலும் மகாராஷ்டிரத்தில் மிக வலுவான சமூகம் மராத்தா. ஆனால், விவசாயத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நிலவுடைமைச் சமூகங்கள் அடைந்துவரும் பொருளாதார வீழ்ச்சியை நம்முடைய அரசுகள் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். உயர்கல்வி வாய்ப்புகள் பெரும் செலவு மிக்கவையாகவும், கடும் போட்டிக்குள்ளும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், அரசு வேலைவாய்ப்புகளும் கடந்த கால் நூற்றாண்டில் அதிகரித்திடாத சூழலில், இடஒதுக்கீட்டுக்கான குரல்கள் தொடர்ந்து மேலெழும்பவே செய்யும். ‘50% வரையறை’ என்ற எல்லையைத் தாண்டி, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் நோக்கி இந்தியா கால் எடுத்துவைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x