

தே
சிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் புதிய அறிவிக்கை தமிழகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்படி, வருமான வரி, தொழில் வரி செலுத்தும் ஒருவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள் தொடங்கி, நான்கு சக்கர வாகனம், குளிர் சாதனம், மூன்று அல்லது நான்கு அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகளைக் கொண்டவர்கள் என்று பலதரப்பினருக்கு இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காது. ஏற்கெனவே மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு விவகாரம், பெட்ரோலிய மண்டல விவகாரம், ஜிஎஸ்டி விவகாரம் என்று பறிபோகும் மாநிலத்தின் உரிமைகளைக் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் தமிழக மக்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது இந்த அறிவிக்கை.
உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஒரு மக்கள் நல அரசு, தனது குடிமக்களுக்கு அந்த உரிமையை வழங்கக் கடமைப்பட்டது. உணவுப் பற்றாக்குறை மிகப் பெரும் பிரச்சினையாக இருந்த 1967-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, தொடர்ந்து அதிமுக இரண்டுமே உணவு வழங்கலில் தொடர் அக்கறையைக் காட்டிவந்திருக்கின்றன. சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு செலவு அல்ல; அது ஒரு முதலீடு என்பதை உணர்ந்து செயல்பட்டதன் விளைவாகவே நாட்டின் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் இருந்துவருகிறது தமிழகம்.
ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் மானியத்தில் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எவரும் குறை கூற இயலாது. அதற்கென முன்னெடுக்கப்பட்டுவரும் மின்னணு ரேஷன் அட்டை, முழு கணினிமயம் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், இந்த நோக்கத்தைக் காரணமாகச் சொல்லிக்கொண்டு இப்போது வெளியாகியிருக்கும் அறிவிக்கையின் நிபந்தனைகளைப் பார்க்கும்போது அரசின் எண்ணம் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்பதில் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, சமூக நலக் கடமைகளிலிருந்து தன்னைப் படிப்படியாக விடுவித்துக்கொள்ளும் எண்ணத்தில் அது இருப்பதாகவே தோன்றுகிறது. மிக அபத்தமான, நடைமுறைக்கு ஒவ்வாத அளவீடுகளைக் கொண்டு மக்களின் வறுமை அளவைக் கணக்கிடும் அரசு அதன் அடிப்படையில் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிப்பது என்று முடிவெடுப்பது மிகப் பெரிய சமூகப் பின்னடைவாக அமையும்.
சில நிபந்தனைகளுடன் இந்தத் திட்டத்தில் இணைந்திருப்பதாகவும், மத்திய அரசின் இந்த விதிகள் தமிழகத்துக்குப் பொருந்தாது என்றும் சப்பைக்கட்டு கட்டுகிறார் தமிழக உணவுத் துறை அமைச்சர். ஆனால், மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடங்கி பல்வேறு பிரச்சினைகளிலும் மாநிலத்தின் உரிமைகளைப் பறிகொடுத்துவரும் அதிமுக அரசின் வார்த்தைகள் மக்களிடம் எந்த நம்பிக்கையையும் உருவாக்கவில்லை. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக மக்களவையில் அமர்ந்திருக்கும் அதிமுக, ஒரு தேசிய விவாதமாக்க வேண்டிய பிரச்சினை இது. மத்திய அரசின் எல்லா நிர்ப்பந்தங்களுக்கும் இப்படியே அடிபணியும் கலாச்சாரத்தைத் தொடர்ந்தால் வரலாற்றில் மன்னிக்கவே முடியாத அரசாக இது நினைவுகூரப்படும்!