

அ
ந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமைதான் என்றும் அதற்கு அரசியல் சட்ட ரீதியிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு மனதாகத் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு. ஆதார் அடிப்படையிலான தனி அடையாளத் திட்டம் தொடர்பான வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஜனநாயக நாட்டில் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என்று அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அதேசமயம், நலத்திட்டங்கள் தொடங்கி ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆதார் அவசியம் என்று கட்டாயப்படுத்திவரும் மத்திய அரசுக்கு எதிரான தீர்ப்பு அசாதாரணமானது என்பதையும் மறுப்பதற்கில்லை.
அந்தரங்கம் என்பது இதுதான் என்று திட்டவட்டமான வடிவத்தைக் காட்டி விளக்க முடியாது எனவே இது அடிப்படை உரிமையல்ல, அரசியல் சட்டம் அளிக்கும் பல உரிமைகளில் ஒன்று என்று அரசுத் தரப்பு அபத்தமாக வாதிட்டது. அந்தரங்க உரிமை என்பது ஐரோப்பிய நாடுகளைப் பார்த்து இறக்குமதி செய்யப்பட்ட மேல்தட்டு மனோபாவக் கருத்து என்றும் கூறியது. இந்த வாதங்கள் அனைத்தும் இப்போதைய தீர்ப்பில் தவிடுபொடியாகிவிட்டன. அதே மூச்சில் பாலின விழைவு தொடர்பான தீர்ப்பும் வரவேற்பைப் பெறுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 தொடர்பாக 2014-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. எனவே தன்பாலின உறவாளர் உள்ளிட்டோர் வழக்கில் மறு பரிசீலனைக்கு வழி ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு முன் நீதிமன்றங்கள் தவிர்க்க இயலாமல் அளித்த சில தீர்ப்புகளில் அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தனித்திருக்கும் உரிமை என்பது மனிதர்களின் குணாம்சங்களிலிருந்து பிரிக்க முடியாத அம்சம். சில உரிமைகள் இயற்கையானவை - சில உள்ளார்ந்தவை, அரசியல் சட்டம் அவற்றை அங்கீகரித்து வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆதார் அட்டையைப் பொறுத்தவரையில் அந்தரங்க உரிமை பாதிக்கப்படாமல் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள், எல்லைகள் குறித்து நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் வெளிப்படையானவை, நியாயமானவை, எதேச்சாதிகாரமற்றவை என்ற நிலை இருந்தால்தான் இந்தத் தரவு திரட்டல்களுக்கு நியாயம் இருக்கும். நாட்டின் நலனுக்கு அவசியம் என்ற நிலையும் இருக்க வேண்டும். இங்குதான் எச்சரிக்கைத் தேவைப்படுகிறது. தான் கொண்டுவரும் திட்டமும், கடைப்பிடிக்கும் நடைமுறைகளும் நாட்டின் நலனுக்காகத்தான் என்று அரசு கூறிவிடும். தேசப் பாதுகாப்பா, தனிநபர் சுதந்திரமா என்றால் தேசப்பற்றுதான் முன்னுரிமை பெற வேண்டும் என்று அரசு எப்போதுமே கூறும். அதே வாதத்தைத் தனிநபரின் அந்தரங்க உரிமையிலும் முன்வைத்தது. அரசின் சமூக-பொருளாதார திட்டங்களுக்கு இத்தரவுகள் அவசியம், அறிவுசார் சமூகமாகிவருவதால் இவற்றைத் திரட்ட நேர்கிறது என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்படலாம். எனினும் இப்போதைக்கு இந்தத் தீர்ப்பு மக்களுக்கிருந்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அரசுக்கும் மக்களுக்குமான உறவு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியிருக்கிறது!