

க
டந்த வாரத்தில், தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கமான காய்ச்சலுக்காக மருத்துவ மனையில் தங்கி சிகிச்சைபெறும் எண்ணிக்கையைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம். புறநோயாளிகளாகச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக இருக்கும். இவ்வளவு மோசமான சூழ்நிலையில், தமிழக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்று பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.
2013-ம் ஆண்டு முழுமைக்கும் 6,000-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,500-ஐத் தாண்டிவிட்டது. சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் டெங்கு வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இந்திய அளவில் 80%-ஐத் தாண்டிவிட்டது. வழக்கமாக மழைக் காலங்களில் மட்டுமே டெங்கு நோய் பரவும். ஆனால், கடும் வறட்சி நிலவிய இந்த ஆண்டிலும்கூட டெங்கு அதிக அளவில் பரவியிருக்கிறது.
தேங்கும் நன்னீரில் பெருகும் கொசுக்களே டெங்கு நோய்ப் பரவலுக்கான காரணம். எனவே, நீர் பராமரிப்பு நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே டெங்கு நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்த முடியும். வீடுகளில் பாதுகாப்பான முறையில் நீரைப் பராமரிக்காததால்தான் கோடைக் காலத்திலும்கூட கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு பரவுகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நீரைப் பாதுகாப்பான முறையில் பராமரிப்பது தனிநபர்களின் பொறுப்பு மட்டுமல்ல. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதில் பெரும் பங்கு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாமல் பொறுப்பு அலுவலர்களாலேயே உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கப்பட்டுவரும் நிலையில், டெங்கு நோய் அதிகரித்திருப்பது அவர்களின் நிர்வாகத் திறனின்மையின் ஒரு அடையாளமாகவே இருக்கிறது. டெங்குவை எதிர்கொள்வது என்பது வெறும் நோய்த்தடுப்பு நடவடிக்கை மட்டுமல்ல, நகரமைப்புத் திட்டங்களில் சுகாதார அம்சங்களுக்கு உரிய கவனம் செலுத்தினால் மட்டும்தான் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவாமல் தடுக்க முடியும்.
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தமிழக அரசு தீவிரமாகச் செயலாற்ற வேண்டிய தருணமிது. கட்சியைக் கைப்பற்றுவது, ஆட்சியைப் பாதுகாப்பது என அரசியல் களத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதிமுக அரசு, மக்களின் உயிர் காக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டிவருகிறது மிகவும் ஆபத்தானது. அதிலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட தமிழக சுகாதாரத் துறை, உயிரிழப்புகளுக்கு டெங்கு காரணம் இல்லை என்று மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது. டெங்கு தொடர்பான உண்மையை மறைப்பதால், அதைக் கட்டுப்படுத்திவிட முடியுமா? தமிழக அரசு இனியாவது மக்களின் உயிரோடு விளையாடாமல் உடனடி நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.