

ப
ள்ளி மாணவர்களை எட்டாம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி பெறவைக்கும் கல்வி உரிமைச் சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாயத் தேர்ச்சி முறை இருந்தால் போதுமானது என்பதே மத்திய அரசின் கருத்தாக இருக்கிறது. இந்தியக் கல்வித் துறையின் குறைபாடுகளை உணர்ந்துகொள்ளாத மேட்டுக் குடி மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் நடவடிக்கை இது.
2015-ல் தொடக்கநிலைக் கல்வியில், படிப்பைப் பாதியில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்களில் 5% ஆகவும், பள்ளியிறுதி வகுப்பு வரையிலான பருவத்தில் 17% ஆகவும் இருக்கிறது. மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அரசுப் பள்ளிகளில்தான் அதிகம். குழந்தைகள் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2010-ல் நிறைவேற்றப்பட்டபோது, பள்ளிக் கல்வி யைப் பாதிக்கும் எல்லா தீமைகளும் இனி முற்றுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எட்டாவது வகுப்பு வரையில் தடையில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லலாம் என்று அச்சட்டத்தின் பிரிவுகள் 16 மற்றும் 30(1) ஆகியவை வழி செய்கின்றன. மாணவர் கள் தொடக்கக் கல்வி பெறுவதை உறுதிசெய்யும் இச்சட்டப் பாதுகாப்புக்கு எந்த வழியிலும் அரசு ஊறு செய்துவிடக் கூடாது.
அடிப்படை வசதிகளைக் கொண்ட பள்ளிக்கூடம், ஆர்வத்துடன் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர், படிப்பதற்கு ஆர்வ மூட்டும் பாடத்திட்டம், பாடப் புத்தகங்கள் போன்றவை இல்லாத நிலையில், தேர்வில் தோல்வியுறும் மாணவர்களின் நிலைக்கு, அவர்களை மட்டுமே பொறுப்பேற்க வைக்கும் தந்திரம்தான் தலைதூக்கி நிற்கிறது. இதனால், பள்ளி பயிலும் வயதில் மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திய பழைய ஆபத்து மீண்டும் ஏற்பட்டுவிடும். இவர்கள் மீண்டும் சிறார் தொழிலாளர்களாகத் திரும்புவதற்கே இது வழிவகுக்கும். குடும்பத் தொழில்களில் சிறுவர்கள் ஈடுபட லாம் என்று தொழிலாளர் சட்டத்தில் ஒரு பிரிவைத் தாராளமாக அனுமதித்த மத்திய அரசின் நோக்கத்துக்கு இது மிகவும் பொருத்தமாகவே இருக்கும்!
படிப்பறிவு இல்லாத, வறுமையில் வாடும் பெற்றோரைக் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதில் தொடக்கக் காலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். அதைப் பெரிதாக சுட்டிக்காட்டி, மனப்பாடம் செய்து தேர்வெழுதுவதில் திறமைக் குறைவாக இருக்கிறது என்பதற்காக, அதே வகுப்பில்தான் மீண்டும் படிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. இது மாணவர்களிடம் தன்னம்பிக்கையை இழக்க வைப்பதுடன், அவர்களுடைய படிப்பைப் பாதியில் நிறுத்துவதற்கே வகை செய்யும். எனவே, இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.