Published : 08 Aug 2017 08:36 AM
Last Updated : 08 Aug 2017 08:36 AM

வெங்காய விலை உயர்வு: அரசு அலட்சியம் காட்டக் கூடாது!

க்காளி, வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்திருப்பது நமது வேளாண் சந்தை அமைப்பிலும் விளைபொருட்கள் விற்பனை ஏற்பாட்டிலும் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனையோ கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும் வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்வது, விலை வீழ்ச்சி காணாமல் தடுப்பது, கிடங்குகளில் சேமிப்பது, நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பது போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. மக்களை நேரடியாகப் பாதிக்கும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் திட்டங்கள் அரசிடம் இல்லை என்பதுதான் கவலை தரும் விஷயம்.

சமீபத்தில் தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.75, ரூ.100 என்று வெவ்வேறு மாநிலங்களில் விற்கப்பட்டது. பின்னர், சற்று விலை குறைந்தது. மூன்று கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயமும் திடீரென ஒரு நாளில் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்தது. வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரத்தில் ஒரு குவிண்டால் ரூ.2,200 வரை உயர்ந்தது. இத்தனைக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னால் மகாராஷ்டிரத்திலும் மத்திய பிரதேசத்திலும் ஒரு குவிண்டாலுக்கு ரூ.500-க்கும் குறைவாகத்தான் விற்றது.

போதிய மழை பெய்யாததால் கர்நாடகம், ஆந்திர பிரதேசத்தில் வெங்காய விளைச்சல் குறைந்தது என்ற தகவல் பரவியது. சில மாதங்களுக்கு முன்னால் விலை குறைந்ததால் தேங்கிய வெங்காயம் முழுக்க விற்றுத் தீர்ந்து பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதைப் போலவே, தற்போது விலை உயர்ந்திருப்பதையும் நம்ப முடியவில்லை. ரபி பருவத்தில் வெங்காயம் விலை குறைந்ததால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எனவே, மத்திய அரசு ஐந்து லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்திருந்தது. அப்படியிருக்க திடீர் பற்றாக்குறை வர வாய்ப்பே இல்லை.

இடைத்தரகர்களின் வலையை அறுத்துக்கொண்டு சாகுபடியாளர்கள் வெளியேறி, தங்களுக்கு நல்ல விலை பெறுவதற்காக வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டியின் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. விவசாயி தன்னுடைய சாகுபடியை நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள சந்தைக்கும், நல்ல விலைக்கு அனுப்ப மின் சந்தை விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதை நடைமுறைப்படுத்த மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.

வேளாண் பொருட்களின் விற்பனை விலை ஒரேயடியாகச் சரிந்துவிடாமலிருக்க 2015 மார்ச்சில் உருவாக்கப்பட்ட ‘விலையை நிலைப்படுத்தும் நிதி’க்கு மத்திய - மாநில அரசுகள் சமமாகப் பணம் வழங்க வேண்டும். ஆனால், இது இன்னமும் முறையாகச் செய்யப்படவில்லை. தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைகளின் சம்மேளனமும் தோட்டக்கலைப் பயிர்களின் விலை உட்பட அனைத்து வேளாண் பொருட்களின் விலையையும் நிலைப்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்டது. அதன் பணியும் திருப்திகரமாக இல்லை. இப்போதைக்கு இதைப் போன்ற அமைப்புகளின் செயல்களை முடுக்கிவிடுவதுடன், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்து, சாகுபடியாளர் - நுகர்வோர் என்ற இரு தரப்பினருக்கும் பலன் தரச் செய்ய வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x