Published : 04 Aug 2017 09:50 AM
Last Updated : 04 Aug 2017 09:50 AM

நீட் தேர்வு: எத்தனை நாள் இப்படித் தப்பித்துக்கொள்ள முடியும்?

நீ

ட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, அரசு தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனு கடந்த திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே இந்தப் பிரச்சினையைத் திறமையில்லாமல் கையாண்டுவரும் அதிமுக அரசு இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாததற்கு, மாநிலப் பாடத்திட்டத்தின் தரம், கல்வி முறை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலான கேள்விகளை அமைத்தது முதல், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு வினாத்தாளை அமைத்தது, தென்னிந்திய மாநிலங்களில் தேர்வு சமயத்தில் மாணவர்களிடம் மிகக் கடுமையான கெடுபிடியைக் காட்டியது என்று பல்வேறு விஷயங்கள் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அதிகரித்திருந்தன.

ஒரே கல்வித் தரம், ஒரே பாடத்திட்டம் இல்லாத இந்தியா போன்ற தேசத்தில் இப்படி ஒற்றை நுழைவுத் தேர்வு நடத்துவது சமூகநீதிக்கு எதிரானது என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலமான எண்ணிக்கையில் இருக்கிறது அதிமுக. ஆனால், பெயரளவு நடவடிக்கைகளைத் தாண்டி கைவிரிக்கும் போக்கையே தொடர்ந்து மேற்கொள்கிறது அதிமுக. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் இரண்டு மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியதுடன் சரி.

பல்வேறு சந்தர்ப்பங்கள் அமைந்தும் அதுதொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவே இல்லை. இதன் மூலம், இந்த ஆண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று கடைசிவரை நம்பியிருந்த மாணவர்கள் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் உத்தரவு செல்லாது என்று உயர் நீதிமன்றம் மீண்டும் தற்போது உறுதிசெய்திருக்கிறது. பிரச்சினை அத்துடன் முடிந்துவிடவில்லை. மருத்துவப் படிப்பு தொடர்பாக எழுந்திருக்கும் சிக்கல்கள் காரணமாக, பிற படிப்புகளில் சேர்வதிலும் மாணவர்கள் மத்தியிலும் பிற கல்லூரிகளிடையேயும் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.

அடுத்த ஆண்டில் நீட் தேர்வு கட்டாயம் நடந்தே தீரும் எனும் சூழலில், அரசியல்ரீதியான அழுத்தத்தின் மூலம் அதைத் தடுக்கவும் மறுபுறம், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார் செய்யவும் என்ன உத்தியை வைத்திருக்கிறது தமிழக அரசு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x