

இ
ந்தியாவில் மகளிர் கிரிக்கெட் தனக்கான மரியாதையை ஒருவழியாக அடைந்திருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டுக்குப் போதிய முக்கியத்துவமும் மதிப்பும் இருந்திராத நிலையில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது திறனை முழு அளவில் வெளிப்படுத்தி அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறது.
லண்டனில் நடந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் வரை சென்ற இந்திய மகளிர் அணி, பரபரப்பான அந்த ஆட்டத்தில் ஒன்பதே ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. எனினும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எழுச்சி ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. மிதாலி ராஜும் அவருக்கு முன்னால் அணித் தலைவராக இருந்த ஜுலான் கோஸ்வாமியும் கடந்த 15 ஆண்டுகளில் காட்டிய அர்ப்பணிப்பும் உழைப்பும் இதற்குப் பக்கபலமாக இருந்திருக்கின்றன. ஸ்மிருதி மந்தானா, பூனம் ராவத், ஹர்மன்ப்ரீத் கவுர் போன்ற வீராங்கனைகளும் இதற்குத் துணை நின்றிருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் படுதோல்வியடைந்தாலும், வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்த இந்திய அணி, அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வென்றபோது தோல்வியிலிருந்து மீண்டு வரும் உத்வேகத்தை நமது வீராங்கனைகள் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இந்த உத்வேகம் தனக்குப் பெரும் நம்பிக்கையையும் பெருமையையும் அளித்ததாக மிதாலி குறிப்பிட்டிருக்கிறார்.
மிதாலியும் ஜுலானும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களையும் விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்தவர்கள். எனினும், இருவரும் தலா 10 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடப்பதுபோல் இரு நாடுகள் பங்கேற்கும் தொடர்களோ, உள்ளூர் அளவிலான போட்டிகளோ இங்கு நடத்தப்படுவதில்லை. ‘ஆஸ்திரேலிய பிக் பேஷ் லீக்’ போட்டிகளில் விளையாடியதன் மூலம்தான் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது திறனை வளர்த்துக்கொள்ள முடிந்தது. இதை மிதாலியும் குறிப்பிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதிப் போட்டியில் 115 பந்துகளில் 171 ஓட்டங்கள் எடுத்து பிரமிக்க வைத்தவர் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்தியாவில் மகளிருக்கான ஐபிஎல் வேண்டும் என்று இந்த அடிப்படையில்தான் மிதாலி கேட்டிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பல குறைகள் இருந்தாலும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்குள் ஒரு ஜனநாயகத் தன்மையைக் கொண்டுவந்ததில் ஐபிஎல்லுக்கு முக்கியப் பங்கு உண்டு.
மிதாலி கோருவதுபோல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. எனினும், அது சாத்தியமானால் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு பெரும் திறப்பை ஏற்படுத்தித் தரும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்திய ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பை மகளிர் அணி பெற்றிருக்கும் நிலையில் அதன் வளர்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் சமூகம் எந்த அளவுக்குத் துணை நிற்கும் என்பதில்தான் அதன் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!