

ஆ
தார் அடையாள அட்டைக்காகத் தரவுகள் திரட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து முடித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அந்தரங்கம் என்பது அரசியல் சட்டம் குறிப்பிட்டுள்ளபடி அடிப்படை உரிமையா என்பது தொடர்பாக இவ்வழக்கு விசாரணையில் வாதிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் அட்டைக்காகக் கண்ணின் கருவிழிகளின் புகைப்படமும் கைவிரல் ரேகைகளும் பதிவுசெய்யப்படுவது அந்தரங்க உரிமையை மீறும் செயல் என்று சில மனுதாரர்கள் ஆட்சேபித்துள்ளனர். தரவுகள் என்பவை தகவல் தொழில்நுட்ப உலகில் இன்றியமையாதவை என்பதால், தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும், அது வரலாற்றில் இடம்பெறப்போவது நிச்சயம்.
இவ்விஷயத்தில் பல விஷயங்கள் கவனமாக அணுகப்பட வேண்டியவை. தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக இருக்கலாம். ஆனால், ஆதார் அடையாள அட்டைக்காக மக்களிடமிருந்து திரட்டும் தரவுகளைப் பாதுகாப்பதில் பெருமைப்படும் நிலையில் இல்லை. முதலில் இந்த முரண்பாடு சரிசெய்யப்பட வேண்டும். மேலும், எப்பாடுபட்டாவது ஆதார் தரவுகளைத் திரட்டும் திட்டத்தைத் தொடர மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. ரேஷன் அட்டைகளிலும் வங்கிக் கணக்குகளிலும், வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணுடனும் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. அரசியல் சட்டத்தின் கூறு 21, கூறு 19 ஆகியவற்றின்படி அந்தரங்க உரிமை என்பது அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என்றும் அரசு வாதிடுகிறது.
இதற்கு முந்தைய வழக்கு விசாரணைகளின்போது அந்தரங்கம் என்பது பொதுவான சட்ட உரிமை என்று கூறிய உச்ச நீதிமன்றம், அது அடிப்படை உரிமையில்லை என்று கருத்து தெரிவித்தது. அந்தரங்க உரிமை என்பது அரசுக்கு எதிராக மட்டுமல்ல, பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் வியாபாரப் பசிக்கு எதிராகவும் அவசியப்படுகிறது என்பது ஆதார் கூடாது என்ற தரப்பைச் சேர்ந்தவர்களின் வாதம். தரவுகளைப் பாதுகாப்பது அந்தரங்க உரிமையைக் காக்கும் நடவடிக்கையாகிவிடாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தரவுகளைப் பாதுகாக்க ஆலோசனை கூறுவதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குழுவை அமைத்துவருவதாக மத்திய அரசு இந்த விசாரணையின்போது தெரிவித்திருக்கிறது. இந்தக் குழுவில், ஆதார் திட்டத்தின் தலைவர் அஜய் பூஷண் பாண்டேயும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதற்கிடையில், ஆதார் திட்டத் தரவுகளைச் சட்ட விரோதமாகக் கையாடல் செய்ததாக பெங்களூருவில் பொறியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது ஆதார் திட்டம் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது எனும் கேள்வியை எழுப்பியிருக் கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய நாடு என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது. திரட்டிய தரவுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், மக்களின் அந்தரங்கத்தைக் காக்கும் சட்டத்தையும் வலுப்படுத்த வேண்டும்!