

அ
ரசு மாவட்ட மருத்துவமனைகளின் சில பகுதிகளை 30 ஆண்டுகளுக்குத் தனியாருக்குக் குத்தகைக்கு விடலாம் என்று நிதி ஆயோக் அளித்திருக்கும் பரிந்துரை தொடர்பாக மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. இந்திய பொதுச் சுகாதாரத் துறையைப் பீடிக்கும் அடுத்த அபாயமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அரசு மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறன் எப்போதுமே விமர்சனத்துக்குரியதாகவே இருந்துவருகிறது. ஆனால், இதற்கான பொறுப்பு அரசையே சாரும். தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அதிகம் நாட வேண்டிய நிலை ஏற்படக் காரணம், பொது சுகாதாரத் துறையில், அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துவருவதும் தன்னுடைய பொறுப்புகளை படிப்படியாக அரசு கழற்றிவிடுவதும். நாடு முழுவதும் 763 மாவட்ட மருத்துவமனைகள் இயங்கிவரும் நிலையில், ஐந்து மாநிலங்களின் மருத்துவமனைகளில்தான் இதய நோய், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளில் சுமார் 42% அளவுக்கேனும் கையாளும் கட்டமைப்பு இருக்கிறது என்கிறது சுகாதாரத் துறை.
தனியார் மருத்துவத் துறை போதுமான கண்காணிப்பில் இல்லை என்பதையும், தனியார் மருத்துவமனைகள் பெருமளவில் வணிக நோக்கங்களுடன் செயல்படுவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவச் செலவுகளுக்காக அரசு வழங்கும் நிதி, மானியம் அல்லது தனியார் மருத்துவக் காப்பீட்டுத் தொகை போன்றவை நோயாளிகளுக்கு முறையாகச் சென்றடைய உறுதிசெய்யுமா எனும் கேள்வியும் எழுகிறது. மேலும், தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும் எனும் நோக்கத்துக்கும் எதிரான திட்டம் இது என்றும் விமர்சனங் கள் எழுந்திருக்கின்றன.
மேலும் இப்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு 50 அல்லது 100 படுக்கை வசதிகளை வழங்குவதன் மூலம், தொற்றா நோய்களுக்கான சிகிச்சையைப் பெயரளவுக்குத்தான் அளிக்க முடியும். தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விஸ்வரூபமாக அதிகரித்துவரும் சூழலில், இது பெரிய அளவில் பலன் தராது. மேலும், தனியாருக்கு 30 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டால், அரசு மருத்துவமனைகள் சாமானிய மக்களிடமிருந்து ஒருகட்டத்தில் அந்நியமாகி, தனியார்மயமாகிவிடும் ஆபத்தையும் புறக்கணிப்பதற்கில்லை. ஏழைகளுக்கான முதலும் கடைசியுமான ஒரே நம்பிக்கை அரசு மருத்துவமனைகள். அவற்றில் வசதிக்குறைவு இருப்பினும், அவற்றை மேம்படுத்தத்தான் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, இப்படியான யோசனைகள் ஏற்கத்தக்கதல்ல.
இந்திய சுகாதாரத் துறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, தொற்றா நோய்க் கூட்டங்களின் படையெடுப்பு. கிட்டத்தட்ட நான்கில் ஒரு இந்தியர் தொற்றா நோய்க் கூட்டங்களின் பாதிப்பை எதிர்கொள்கிறர். அரசு மாறிவரும் சுற்றுச்சூழல், வாழ்வியல் நெருக்கடிகள், உணவுக் கலாச்சாரம் எல்லாவற்றையும் ஆராய்ந்து மிகப் பிரம்மாண்டாகச் செயலாற்ற வேண்டிய தீவிரப் பிரச்சினை இது. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டியதும், அதன் ஒரு பகுதியாகும். மாறாக, தனியாரை நோக்கி சாமானிய மக்களைத் தள்ளிவிடுவது பொறுப்பற்றதனம்.