

பா
லியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சரியான பாடம்.
ஹரியாணாவின் சிர்ஸாவில் தேரா சச்சா சவுதா அமைப்பை நடத்திவந்த ராம் ரஹீம் சிங், கடந்த 2002-ல் ஆண்டு இரு பெண் பக்தர்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹரியாணா, பஞ்சாப், டெல்லியில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைச் சம்பவங்களில் 38 பேர் உயிரிழந்ததும், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தற்காலிகமாக ரோஹ்தக் சிறைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஜெகதீப் சிங், ஹெலிகாப்டர் மூலம் அந்தச் சிறைக்குச் சென்று அங்கேயே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இரண்டு பலாத்கார வழக்குகள் என்பதால் ஒவ்வொரு வழக்குக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்கள் காட்டிய உறுதியும், வழக்கைத் தொடர்ந்து நடத்திய சிபிஐயும், விசாரணைக்கு உதவிய அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.
இதுபோன்ற சாமியார்களும் வழிபாட்டுக் குழுத் தலைவர்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தும் கடமையும் அதிகாரமும் அரசுக்கு இருக்கிறது. ஆனால், மிகப் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் கொண்ட வழிபாட்டுக் குழுக்கள் வாக்கு வங்கிக்கு உத்தரவாதம் தருபவை என்பதால் அரசுகள் அவற்றை மென்மையாகவே கையாள்கின்றன.
குறிப்பாக, வெள்ளிக்கிழமை அன்று நடந்த வன்முறைச் சம்பவங்கள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியாணா பாஜக அரசு எத்தனை மெத்தனமாக நடந்துகொண்டது என்பதைக் காட்டுகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கோ, உயிர் களையும் உடைமைகளையும் காப்பதற்கோ ஹரியாணா அரசு தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை. பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களிலும் வன்முறை பரவியது என்றாலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட்டிருந்தன. தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்.
ஆன்மிகம் எனும் பெயரில் சட்டவிரோதமாகச் செயல்படுபவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும். அத்துடன், இதுபோன்ற வழிபாட்டுக் குழுக்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அரசுகளின் கடமை. அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்!