Published : 27 Jul 2017 09:23 AM
Last Updated : 27 Jul 2017 09:23 AM

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ள தேசியக் கொள்கை அவசியம்!

ன்றிக் காய்ச்சலால் இந்த ஆண்டு மட்டும் 12,500 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 600 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதிகாரபூர்வ தரவுகளின்படி, மகாராஷ்டிரத்தில் மட்டும் இந்த ஆண்டு 284 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2016-ல் இந்தியாவில் இந்தக் காய்ச்சலுக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கையே 265 தான். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே நாடு முழுவதும் 6,000 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இறந்தவர்கள் 160 பேர். இது இப்பிரச்சினையின் தீவிரத் தன்மையைக் காட்டுகிறது.

2015-ல் இந்தப் பாதிப்பால் 3,000 பேர் மரணமடைந்ததை ஒப்பிடும்போது, தற்போது பலி எண்ணிக்கை குறைவு என்றாலும், பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு தொடர்வது கவலைக்குரிய விஷயம். குளிர்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், வரும் மாதங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான ‘ஹெச்1என்1’ வைரஸ் தொடர்பாக முழுமையான மரபணு சோதனையை நடத்தியிருக்கும் புணே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், அதன் மரபணுவில் குறிப்பிடத்தக்க திடீர் மாற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. எனவே, அதிகப் பாதிப்பு ஏற்படாது என்று நம்பலாம்.

இந்த ஆண்டு இந்தியாவில் பரவியிருக்கும் ‘ஹெச்1என்1’ வைரஸ் மிச்சிகன் வகை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. கலிபோர்னியா வகை வைரஸ் போலவே, மிச்சிகன் வகை வைரஸும் ‘ஓஸெல்டாமிவிர்’ மருந்துக்குக் கட்டுப்படுகிறது. இந்நிலையில், பரவலாகக் கிடைப்பதற்கு ஏதுவாக, ‘எக்ஸ்’ பட்டியலிலிருந்து ‘ஹெச்1’ பட்டியலுக்குக் கடந்த மாதம் இந்த மருந்து மாற்றப்பட்டது. உரிய நேரத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவதுடன், ‘ஓஸெல்டாமிவிர்’ (Oseltamvir) மருந்தும் பரவலாகக் கிடைக்கப்பெற்றால் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும். அதேசமயம், இந்த மருந்தை எதிர்கொள்ளும் ஆற்றல் ‘ஹெச்1என்1’ வைரஸுக்குக் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிய 42 ஆய்வகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

வைரஸ் தொற்று முழுமையாகக் கண்டறியப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், முறையான மருத்துவப் பரிந்துரை கிடைப்பதற்கு முன்னரே மருந்தகங்களில் இதற்கான மருந்தைப் பலர் வாங்கும் சூழல் உருவாகலாம். 2009-ல் ‘ஹெச்1என்1’ வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர், இந்தியாவில் கோடைகாலத்தில்கூட இந்தத் தொற்று அடிக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பன்றிக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒரு தேசியக் கொள்கை வகுக்கப்பட்டால்தான் இந்த வைரஸ் தொற்றையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். இது தொடர்பான துல்லியமான தரவுகளைத் திரட்டுவதும் அவசியம். அத்துடன், பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரிக்கும் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் செய்து தரப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x