இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் மிதாலி!

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் மிதாலி!
Updated on
1 min read

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ். ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடந்த புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸின் 5,992 ரன்களைக் கடந்ததன் மூலம் இந்தச் சாதனையை மிதாலி படைத்திருக்கிறார்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மிதாலி 1999-ல் தனது 16-வது வயதில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சர்வதேச அரங்கில் நுழைந்தார். கடந்த 18 ஆண்டுகளில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். 184 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள், 49 அரை சதங்களுடன் 6,137 ரன்களை எடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை.

அவரது தலைமையிலான மகளிர் அணியும் மிகுந்த புத்துணர்ச்சியுடன் ஆடிவருகிறது. ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி அணியில் இடம்பெறுவதற்கு முன்னால் சச்சின் டெண்டுல்கர் எப்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு அச்சாணியாகத் திகழ்ந்தாரோ அப்படியே மிதாலியும் இப்போது மகளிர் அணிக்கு ஆதார சக்தியாகத் திகழ்கிறார். அணியின் மற்ற வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தானா, பூனம் ரௌத் இப்போது அவருடைய சுமையைக் குறைக்கும் வகையில் ஆடிவருகின்றனர்.

மிதாலி ராஜ் நன்கு பயிற்சிபெற்ற பரத நாட்டியக் கலைஞரும்கூட. துணிச்சல் மிக்கவர். சமீபத்தில் ஒரு நிருபர் அவரிடம், உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டார். ஆண் கிரிக்கெட் வீரரிடம், உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்பீர்களா என்று திருப்பிக் கேட்டவர் மிதாலி.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை, ஆடவர் அணியின் ஆட்டம் அளவுக்கு ரசிக்கும் தன்மை நம்மிடையே இன்னமும் ஏற்படவில்லை. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எதிரணிகளுடன் மட்டுமல்லாமல், ஆணாதிக்கப் போக்கின் விளைவான பாராமுகத்துக்கு எதிராகவும் போராட நேர்ந்திருக்கிறது. சொந்தப் பணத்தைச் செலவழித்துத் தனியார் கிரிக்கெட் பயிற்சி நிலையத்தில்தான் பெரும்பாலானோரும் பயிற்சிஎடுத்துக்கொண்டார்கள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வற்புறுத்தல் காரணமாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மகளிர் அணியை ஆதரிக்கத் தொடங்கியது. இருந்தாலும் அரவணைப்பு போதாது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமல்ல, ரசிகர்கள், ஊடகங்கள்கூட ஆண்கள் அணிக்குத் தரும் ஆதரவில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட மகளிர் அணிக்குத் தருவதில்லை என்பதே உண்மை. இனியாவது அனைவருடைய கண்ணோட்டமும் மாறி, மகளிர் அணிக்கும் முக்கியத்துவம் பெருக வேண்டும்! அப்படி முக்கியத்துவம் கிடைக்குமென்றால் அதற்கு மிதாலி போன்றவர்களின் சாதனைகளும் முக்கியக் காரணமாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in