Published : 21 Jul 2017 09:08 AM
Last Updated : 21 Jul 2017 09:08 AM

பத்திரிகையாளர் ஓய்வூதியம் சலுகையல்ல... அரசின் கடமை!

மிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு மாநில அரசு அளிக்கும் மாதாந்திர ஓய்வுத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். வரவேற்கத் தகுந்த அறிவிப்பு இது! ஆனால், ஓய்வுக்குப் பின் வறுமையில் வாடும் அவல நிலையிலிருந்து பத்திரிகையாளர்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் உண்மையாகவே நிறைவேற வேண்டும் என்றால், இந்த ஓய்வுத்தொகையைப் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள், நிபந்தனைகளில் முக்கியமான சில மாற்றங்களை அரசு மேற்கொண்டாக வேண்டும்.

இந்த ஓய்வூதியம் வாங்குபவர்கள் என்று அரசு 163 பேரைக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் புதிதாக 20 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்று அரசு குறிப்பிடுகிறது. “இன்றைய நிலையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும். 60 வயதைக் கடந்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை ஆயிரத்திதுக்கும் அதிகமாக இருக்கும். அவர்களில் 90%-க்கும் கூடுதலானவர்கள் ஓய்வூதியம் தேவைப்படும் நிலையில்தான் உள்ளனர் எனும்போது, அவர்களில் 163 பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருப்பது இந்தத் திட்டத்தில் உள்ள போதாமையைத் தாண்டி, அது தன்னகத்தே கொண்டிருக்கும் சிக்கலையும் நாம் நெருக்கமாகப் பார்க்க வழிகாட்டுவதாகும்.

1986 முதல் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ் ஒரு மூத்த பத்திரிகையாளர் பயன் பெற வேண்டும் என்றால், “20 ஆண்டுகள் ஆசிரியர், உதவி ஆசிரியர், செய்தியாளர், புகைப்படக் கலைஞர் அல்லது பிழைதிருத்துநர் பணியிடங்களில் அவர் பணிபுரிந்திருக்க வேண்டும். அவர்கள் பெற்ற மொத்த ஊதியம் எந்த ஆண்டிலும் ரூ. 2 லட்சத்தைத் தாண்டியிருக்கக் கூடாது. அதாவது, மாதம் சுமார் ரூ. 16,700-க்கு அதிகமாகிவிடக் கூடாது. 58 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும்போது குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கும் மேல் இருக்கக் கூடாது. பணிக்கொடையாகப் பெற்ற தொகை ரூ. 2 லட்சத்துக்கும் மேல் இருக்கக் கூடாது’’ என்று சொல்கிறது அரசின் விதிமுறை. இன்றைய விலைவாசியின் நிலை, ரூபாயின் உண்மையான மதிப்பு ஆகியவற்றோடு மத்திய - மாநில அரசு ஊழியர்கள் பெறும் ஊதியத்தோடு ஒப்பிட்டால், ஒரு துறையில் 20-30 ஆண்டுகள் பணியாற்றி 60 வயதில் ஓய்வுபெறும் ஒரு முதியவர், தன் வாழ்நாளில் ரூ.16,700-க்கு மேல் மாத ஊதியம் பெற்றிருக்கக் கூடாது என்பது எவ்வளவு நடைமுறைக்கு அப்பாற்பட்ட அபத்தமான விதி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அரசின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காகவே காலமெல்லாம் நலிவுற்ற சூழலில் பத்திரிகையாளர்கள் இருக்க வேண்டும் என்பதைப் போல் அல்லவா இருக்கின்றன இந்த விதிகள்!

தன்னுடைய மூத்த குடிமக்கள் எவர்க்கும் அவர்களுடைய ஓய்வுக் காலத்தில் கண்ணியமான வாழ்வை உறுதிசெய்வது ஒரு மக்கள் நல அரசின் தார்மிகக் கடமை. பத்திரிகையாளர்கள் விஷயத்தில் ஏன் அரசு கூடுதல் கரிசனம் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது என்றால், அவர்களும் அரசு எனும் அமைப்புக்கு வெளியே இந்தச் சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் பணியில், மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் பணியில், ஒருவகையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாகத் தங்களை நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். உலகில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. அதிகாரத்தின் எவ்வளவோ அச்சுறுத்தல்களுக்கு இடையில் எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழலிலேயே பத்திரிகையாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அதேசமயம், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பத்திரிகையாளர்களின் பணி அவர்களுடைய பணிக் காலத்தில் பொருளாதாரரீதியாகத் தங்களுக்கென பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ளும் அளவுக்குப் பெரும்பான்மையானோருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இந்த இடத்தில்தான், காலமெல்லாம் சமூகத்துக்காக ஓடிய ஒரு பத்திரிகையாளர் தன் ஓய்வுக் காலத்தைக் கண்ணியமாகக் கழிப்பதற்கான சூழலை ஒரு அரசு உறுதிசெய்ய வேண்டிய கடமையும் அவசியமும் எழுகிறது.

தமிழக அரசு இதை உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அரசின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், அரசின் விதிகள் நடைமுறைச் சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஒருவர் உண்மையாகவே பத்திரிகையாளர்தானா என்று உறுதிசெய்துகொள்வதில் அரசு அக்கறை செலுத்தலாம். ஆனால், 20-30 ஆண்டுகள் பத்திரிகையாளர் பணியில் இருந்து ஒருவர் ஓய்வு பெற்றிருப்பது உறுதியாகத் தெரியும் நிலையில், ஒருவர்கூட இத்திட்டத்தின் பயனை இழக்கக் கூடாது. வருமானம் அல்ல; ஒருவர் ஆற்றியிருக்கும் பணியே தகுதி என்றாக வேண்டும். கருணையின் அடிப்படையில் அல்ல; தார்மிகக் கடமை எனும் அடிப்படையில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய விஷயத்தைத் தமிழக அரசு அணுக வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x