

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள் உட்பட ஏழு பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை முடித்துக்கொண்டு திங்கள் அன்று இரவு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் பேருந்துமீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். ஓட்டுநர் சலீம் ஷேக்கின் சமயோசிதத்தால் அதிக உயிரிழப்பு நேராமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த காஷ்மீரில் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை எனும் நிலையையே யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலிக்கிறது.
காஷ்மீர் போராட்டத்தின் புதிய வடிவத்தின் போக்கு, இந்திய – பாகிஸ்தான் எல்லையில் தொடரும் பதற்றம், பயங்கரவாதிகள் ஊடுருவுதல் சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அமர்நாத் யாத்திரையின்போது தாக்குதல் நடத்தப்படலாம் என்று சில வாரங்களுக்கு முன்னரே உளவுத் துறை எச்சரித்திருந்தது. எனினும், முழுமையான விசாரணை நடத்தப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாகக் குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை. ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
புர்ஹான் வானியின் மரணத்துக்குப் பிறகு காஷ்மீரில் 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். 2013-ல் ஆயுதம் ஏந்தத் தொடங்கிய இளைஞர்களின் எண்ணிக்கை 31-தான். இந்த ஆண்டில் மட்டும், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் என்று 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2009-ல் 375 பேர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் பலியானவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில்தான் அதிகம். லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்ற உண்மையைச் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வலம்வந்த காணொலியொன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கும் காஷ்மீரில் அமர்நாத் சம்பவங்கள் போன்றவை நிலைமையை மேலும் மேலும் மோசமாகவே ஆக்குகின்றன. எனினும், இந்தப் படுகொலைத் தாக்குதலைக் கண்டித்து ஜம்முவிலும் தலைநகர் ஸ்ரீநகரிலும் பெருந்திரள் மக்கள் திரண்டு பேரணிகள் நடத்தியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. பொதுமக்கள் வேறு பயங்கரவாதிகள் வேறு என்ற உண்மையை காஷ்மீர் மக்களின் பேரணிகள் பொதுச் சமூகத்துக்கு உணர்த்தியிருக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் அரசும் மத்திய அரசும் செய்வதற்கு ஏராளம் இருக்கின்றன. மக்களிடம் அச்சமில்லாத நிலையையும் பயங்கரவாதிகள் மனதில் அச்சத்தையும் ஒருங்கே ஏற்படுத்துவது எல்லாவற்றைவிடவும் பிரதானமானது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நன்றாகப் புரிந்துகொண்டு, முறையான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதுடன் மக்களிடமும் நம்பிக்கையைப் பெற முடியும்.