

சென்னையில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவை தவிர்த்து மற்ற மொழிகளுக்கான ஆய்வு மையங்களை அந்தந்த மாநிலங்களில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்களின்கீழ் கொண்டுவர நிதி ஆயோக் பரிந்துரைத்ததின் பேரில் இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது.
சங்க இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிப் பணிகள் இந்த நிறுவனத்தின் நிதியுதவியோடு நடந்துவருகின்றன. தொன்மையான தமிழ்க் கல்வெட்டுகளைப் பற்றிய ஐராவதம் மகாதேவனின் ஆங்கில நூல் ஒன்றின் விரிவாக்கிய பதிப்பு இந்த நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் நூல்களை ஓலைச் சுவடிகளுடன் ஒப்பிட்டு ஆய்வுப் பதிப்புகளை வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப்படி, இன்னும் பல பணிகள்.
இந்த நிறுவனம், நேரடியாக ஆய்வுப் பணிகளோடு பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் நிதி நல்கி, அவர்களையும் சங்க இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுத்திவரு கிறது. நிதி நல்கும் திறன் கொண்ட அந்நிறுவனத்தை, பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக மாற்றும்போது, அதன் நிதிசார்ந்த அதிகாரங்கள் முடக்கப்பட்டு, ஆய்வுப் பணிகளில் அந்நிறுவனம் ஆர்வம் காட்டுவது நின்றுவிடும். இந்த நிறுவனத்தின் பணிகளை முடக்கவே மத்திய அரசு திட்டமிடுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழறிஞர்கள்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், சென்னையின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தங்களது அன்றாடப் பணிகளுக்குக்கூட தமிழக அரசின் நிதியுதவியைத்தான் எதிர்பார்த்துள்ளன. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவினால் இந்த அமைப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை. நிதியைக் கையாளவும் அதைப் பகிர்ந்தளிக்கவும் அதிகாரம் பெற்ற ஒரே ஒரு தமிழாய்வு அமைப்பான செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்க நினைப்பதற்கும், மத்திய அரசின் ஒரு மொழிக் கொள்கைக்கும் தொடர்பிருக்கிறது என்று சந்தேகம் எழுகிறது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஆய்வறிஞர்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரப் பணியாளர்கள் அல்ல, ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். சங்க இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடும் தமிழறிஞர்களையே ஒப்பந்தத் தொழிலாளர்களாக நடத்திய மத்திய அரசு, இப்போது ஆய்வு நிறுவனத்தையே ஒரு பல்கலைக்கழக வளாகத்தின் துறையாகச் சுருக்க முயற்சிக்கிறது.
சம்ஸ்கிருத ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்விருக்கைகளை உருவாக்கச் செலவழித்துவரும் மத்திய அரசு, தமிழை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவது தவறான போக்கு. இதைத் தமிழ்நாட்டு அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் பெருந்துயரம்! தமிழ், தமிழர்களின் பெருமிதம் மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சார அடையாளமும்கூட என்பதை மத்திய அரசு உணர வேண்டும். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் தொடர்ந்து தன்னாட்சி அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும்!