Published : 12 Jul 2017 10:00 AM
Last Updated : 12 Jul 2017 10:00 AM

மதவாதத்துக்கு இரையாகிவிடக் கூடாது மேற்கு வங்கம்!

மேற்கு வங்க மாநிலத்தில் சமீப காலமாக நடந்துவரும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. வழக்கமான வன்முறைச் சம்பவங்கள் என்பதைத் தாண்டி, பெரிய ஆபத்தொன்றை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் பஷிர்ஹாட் என்ற ஊரில் 17 வயது சிறுவன் ஒருவன், இஸ்லாமியரின் மனது புண்படும் விதத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டான். இதன் விளைவாக கல்வீச்சு, தீ வைப்பு, கோஷ்டி மோதல், கத்திக்குத்துகள் என்று வன்செயல்கள் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. இதற்குக் காரணமாக இருந்த சிறுவன் உடனடியாகக் கைதுசெய்யப்பட்ட பிறகும், இரு தரப்பும் மாறி மாறி மோதலை வளர்த்துக்கொண்டதைத் தடுப்பதற்குக் காவல்துறை தவறிவிட்டது. ஜூலை 4-ல் துணை நிலை ராணுவப் படைகள் அனுப்பப்பட்ட பிறகு அமைதி திரும்பியது.

பிறகு, பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன. சிறுபான்மைச் சமூகத்தவர்கள்தான் மோதலுக்குக் காரணம் என்று பாஜக கூறியது. வகுப்புக் கலவரத்தைத் தூண்டியதே பாஜகதான் என்று திரிணமூல் காங்கிரஸ் பதிலுக்குச் சாடியது. இதையொட்டியே முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் கேசரிநாத் திரிபாடிக்கும் இடையே சூடான வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்தன.

1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த பிறகு, நாடே வகுப்புக் கலவரத்துக்கு ஆளானபோது மேற்கு வங்கத்தில் சிறு சம்பவம்கூட நடைபெறவில்லை. இடதுசாரிகளின் செல்வாக்கும் அவர்கள் ஏற்படுத்தி வைத்த அரசியல் விழிப்புணர்வும் மக்களை மதவாதிகளிடமிருந்து விலக்கி வைத்திருந்தன. நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக வெடித்த போராட்டங்களின்போது முஸ்லிம் விவசாயத் தொழிலாளர்கள் ஆளும் இடதுசாரி அரசு மீது அதிருப்தி கொண்டு திரிணமூல் காங்கிரஸை ஆதரிக்கத் தொடங்கினார்கள். இதனால் இடதுசாரிகளின் அரசியல் செல்வாக்கு சரிந்தது, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியைப் பிடிப்பதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் முஸ்லிம்களில் தீவிரப் போக்கு கொண்டவர்களை திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவித்தது. இது இந்து அடிப்படைவாதிகளிடையே எதிர்விளைவை ஏற்படுத்தி, பாஜகவின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கக் காரணமாகிவிட்டது.

ஒட்டுமொத்த சம்பவமும் சிறுவன் ஒருவனால் தொடங்கியதுதான். இருப்பினும் இது பெரிய அளவில் கலவரமாக வெடிக்கக் காரணமாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தாங்கள் மறைமுகமாக பாஜகவுக்குத்தான் உதவிசெய்கிறோம் என்பதை உணரவில்லை. இந்திய அளவில் பாஜகவுக்குச் சவால் விடுப்பதில் முன்னிலை வகிப்பவர் மம்தா. இதுபோன்ற தீவிரமான பிரச்சினைகளைக் கவனமாகக் கையாண்டு இரு தரப்பினரிடமும் அவர் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லையென்றால் அது பாஜகவுக்கே சாதகமாக முடிந்துவிடக்கூடும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x