

கைகளால் மலம் அள்ளும் கொடுமைக்கு எதிராகக் கடுமையான சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. ஆனாலும், அந்த அவலத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 30 பேர் இறந்ததையொட்டி சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், கைகளால் மலம் அள்ளுவோர் மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் 2013-ஐ மத்திய மாநில அரசுகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.
இந்தியாவில் கைகளால் கழிவகற்றும் சுமார் 26 லட்சம் கழிப்பறைகள் இருக்கின்றன, சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாததன் காரணமாகவே கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் அவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிறது சஃபாயி கர்மசாரி ஆந்தோலன் என்ற சமூக நல அமைப்பு. கைகளால் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு 2014-15ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 448 கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால், தற்போதைய நிதியாண்டில் ரூ.5 கோடி மட்டுமே தொழிலாளர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியும்கூட சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்திற்குரிய திட்டங்களில் ‘தூய்மை இந்தியா’வும் ஒன்று. அதற்காகத் தனி வரியும் வசூலிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த மானுட அவலத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால், முதலில் சமூகப் பாகுபாடுகளுக்கு எதிரான அணுகுமுறை வேண்டும். கணிசமான சமூகங்கள் வீட்டுக்குள் கழிப்பறை அமைப்பதற்கு இன்னும் மனதளவுக்குத் தயாராகவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்ததைக் காட்டிலும் பெரிய அளவில் அதிக செலவில் அதே நேரத்தில் உரிய கட்டுமான வடிவங்களைப் பின்பற்றாமலும் கழிப்பறை கட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக, கழிவுகளை அள்ளும் பணிக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. சட்டங்கள் இயற்றப்படுதல், தண்டனை அளிக்கப்படுதல் போன்றவற்றோடு மக்களின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்படுத்துவதும் அவசியம்.
இந்தப் பிரச்சினையில் மாநில அரசுகளின் பொறுப்புகளை நீதிமன்றம் வரையறுக்க வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் அவசியம். கல்வி, வேலைவாய்ப்புகளின் மூலமாக அவர்களை சாதியத் தளைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்த பணியாளர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். கொடுமையான இந்த வழக்கம் நம்மிடையே இருக்கும்வரை நம் தேசத்தின் பெருமிதங்களுக்கு மத்தியில் பெரிய களங்கமாகவே இது எஞ்சிவிடும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்தாக வேண்டும்.