

மும்பை மாநகரின் பைகுல்லா சிறையில் மஞ்சுளா ஷெட்டி என்ற பெண் கைதியைச் சிறைக் காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொன்றார்கள் என்ற சமீபத்திய செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது. சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக அவர் அதிகாரிகளைக் கேள்வி கேட்டதால், அவர்களுடைய கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் என்றும் அதனால் அடித்துக் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியச் சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ஏற்படும் நெரிசலும், விசாரணை ஏதுமின்றி ஏராளமான கைதிகள் மாதக்கணக்கில் சிறைவாசம் செய்ய நேர்வதும் சிறைத்துறைச் சீர்திருத்தம் அவசியம் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் பிஹாரின் பாகல்பூர் சிறையில் கைதிகளின் பார்வையைப் பறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானபோது நாடே பதறியது. மகாராஷ்டிரத்தில் உள்ள மூன்று பெரிய சிறைகளில் கைதிகளின் நிலை குறித்து ஒட்டுமொத்த விசாரணை நடத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நேரத்தில், பைகுல்லா சிறையில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் வெவ்வேறு தருணங்களில் பிறப்பித்த ஆணைகள், சிறைக்கூடங்களில் பின்பற்றப்பட வேண்டிய மாதிரி நடைமுறைகள், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். இதைச் செய்ய ‘அதிகாரம் பெற்ற குழுவை’ நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் 2017 மார்ச்சில் ஆணை பிறப்பித்திருந்தது. சிறையில் நவீன வசதிகளைச் செய்து தருவதுடன், மாதிரி சிறைச் சாலைகளையும் ஏற்படுத்த ஆலோசனைகளை வழங்குமாறு ‘அதிகாரம் பெற்ற குழு’ பணிக்கப்பட்டிருக்கிறது.
சிறைக் கைதிகளின் சட்டபூர்வ உரிமைகள், சுகாதாரம் - உடல் நலம் தொடர்பான உரிமை, சட்ட உதவி பெறும் உரிமை, மகளிர் மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் நலன் ஆகியவற்றை இந்தக் குழு பரிசீலனையில் எடுத்துக்கொள்ள வேண்டும். கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்ட உடனேயே மற்ற உரிமைகள் நீங்கிவிடுவதில்லை.
தண்டிக்கப்படும் குற்றவாளிகள் கைதியாகி சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவர்களுடைய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட பிற உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு வந்துவிடுகிறது. சிறைக் கைதிகளுக்கு அடிப்படை உரிமைகளை சிறை நிர்வாகம் மறுக்கக் கூடாது. சிறை சீர்திருத்தங்கள் என்பது சிறைக் கைதிகளின் உடை, சாப்பாடு, மருத்துவ வசதி பற்றியது மட்டுமல்ல அவர்களுடைய வாழ்வுரிமையையும் உள்ளடக்கியது.
சிறைக் கைதிகளில் செல்வாக்கானவர்களுக்கு வேண்டிய வசதிகளைத் தேவைக்கு அதிகமாகச் செய்துகொடுப்பதும் தவறு, செல்வாக்கற்றவர்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தவறு. சிறைத் துறை என்பது நீதித் துறையின் நீட்சியே. தண்டிப்பதல்ல, திருத்துவதே சிறையின் கடமை. அதற்கேற்ப சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதை மகாராஷ்டிரம் மட்டுமல்ல பிற மாநிலங்களும் நினைவில் கொள்ள வேண்டும்!