Published : 25 Jul 2017 09:08 AM
Last Updated : 25 Jul 2017 09:08 AM

நினைவுகூரப்படுவீர்கள் பிரணாப் முகர்ஜி!

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, தனது பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து ஓய்வுபெற்றிருக்கிறார்.

ஐந்து முறை மாநிலங்களவைக்கும் இரண்டு முறை மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப், 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் தொழில்துறை, வணிகம், நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளை மிகவும் திறம்பட நிர்வகித்த பிரணாப் முகர்ஜி, எதிர்க் கட்சியினராலும் மதிக்கப்பட்டவர். அபார நினைவாற்றல், கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து வைக்கும் ஆற்றல், தலைமையிடம் விசுவாசம் ஆகிய பண்புகளால் கட்சித் தலைமையால் எப்போதும் உதவிக்கு அழைக் கப்பட்டவர். இதுவரை பத்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

வரலாறு, அரசியல் அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற பிரணாப் முகர்ஜி சட்டப் பட்டமும் பெற்றவர். சிறிது காலம் அரசு ஊழியராகவும் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். சிறப்பாகத் தேர்தல் பணிபுரிந்ததால் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தது, அவரால் தேசிய அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர் பிரணாப் முகர்ஜி.

நெருக்கடிநிலைக் காலத்தில் நடந்த அதிகார துஷ்பிரயோகத்தில் பிரணாபுக்கும் பங்கு உண்டு என்று குற்றம்சாட்டப் பட்டது. ஆனால், ஆதாரபூர்வமாக நிரூபிக்க ஏதும் இல்லை என்று கூறி, குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

பல்வேறு ஆளுமைகளின் நட்பும் தாக்கமும் கொண்டவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், வாஜ்பாய், மது லிமாய், ஹிரேன் முகர்ஜி, இந்திரஜித் குப்தா, மன்மோகன் சிங் போன்றோரின் பேச்சுகளாலும் செயல்பாடுகளாலும் தான் ஊக்கம் பெற்றதாக பிரணாப் குறிப்பிட்டிருக் கிறார்.

தற்போது பிரணாப் முகர்ஜி ஓய்வுபெறும் தருணத்தில், குடியரசுத் தலைவராக அவரது ஐந்தாண்டு காலகட்டத்தைப் பற்றி பார்க்கும்போது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சொல்வதற்கு அதிகம் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். குடியரசுத் தலைவராக இரண்டு பிரதமர்களைக் கண்டவர் பிரணாப். இருவரோடும் சுமுகமான உறவையே அவர் கொண்டிருந்தார். குடியரசுத் தலைவர் என்பவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்; மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டிருக்க வேண்டியவர். இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது காங்கிரஸோ பாஜகவோ மக்கள் நலனைப் பாதிக்கும்படியிலான திட்டங்களைக் கொண்டுவரும்போது பிரணாப் அவற்றுக்குப் பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது அவரது வரலாற்றில் சங்கடமான விஷயம்.

நாட்டு நலனில் அக்கறை உள்ளவர் என்பதுடன் இந்திராவுடன் நெருக்கமாக இருந்த தலைமுறையைச் சேர்ந்த கடைசித் தலைவர், கண்ணியமானவர், இக்கட்டான சூழல் ஒன்றின்போது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர் என்பதெல்லாம் அவருக்கான தனி அடையாளங்களாக வரலாற்றில் இடம்பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x