Published : 14 Jul 2017 10:09 AM
Last Updated : 14 Jul 2017 10:09 AM

ஜி-20 மாநாடுகள் எப்போது அர்த்தமுள்ளவையாக மாறும்?

ஜெர்மனி நாட்டின் ஹாம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ‘ஜி-20’ தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டு நிகழ்ச்சி, குடும்பத்தவர்கள் கூடிப் பேசிக் கலைந்ததைப் போலவே இருந்தது. ‘பணக்கார பெரியப்பாவின்’ மனம் கோணாமல் உபசரித்து அவரை வழியனுப்பி வைக்கும் இதர உறவினர்களைப் போலவே மற்ற தலைவர்கள் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டனர்.

உலகின் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக முறைமைக்குப் புதிய கோணத்தைப் புகுத்துகிறார். அமெரிக்க நலனுக்கு எது உகந்தது என்று பார்த்து முடிவெடுக்கிறார், பேசுகிறார். இயந்திரமயமாதல், எண்மயமாதல் (டிஜிட்டல்) என்று உலகப் பொருளாதாரம் உருமாறிக்கொண்டிருக்கிறது. உள்நாட்டுப் பூசல்களாலும் நாடுகளுக்கு இடையிலான சண்டைகளாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் இதுவரை இருந்திராத வகையில் கோடிக்கணக்கான மக்கள் சொந்த நாடுகளை விட்டு அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். பயங்கரவாதம் என்பது மையத்திலிருந்து விலகி வெவ்வேறு பகுதிகளில் தலைகாட்டிக்கொண்டிருக்கிறது. ஜி-20 உச்சி மாநாடு இந்த எல்லா அம்சங்களையும் பிரதிபலித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்று செய்திகள் வெளியான பிறகு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் முதல்முறையாக இந்த உச்சி மாநாட்டில்தான் சந்தித்துப் பேசினார்கள். பூட்டான் எல்லையில் இந்திய, சீன ராணுவங்கள் எதிரெதிராக நின்றுகொண்டிருக்கும் சூழலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்டனர்.

பாரீஸ் பருவநிலை உச்சி மாநாட்டிலிருந்து அமெரிக்கா விலகிச்சென்றாலும், கரிப்புகையையும் சூழல் மாசையும் குறைப்பதில் எங்களுக்கு உறுதியான எண்ணம் இருக்கிறது என்று ஜி-20 அமைப்பைச் சேர்ந்த, அமெரிக்காவைத் தவிர்த்த ஏனைய 19 நாடுகள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. வர்த்தகத்தைப் பொறுத்தவரை தங்கள் நாட்டுக்குள் பொருள்களை அனுமதிக்க மறுக்கும் காப்புணர்வைக் கண்டிப்பதாகவும் நியாயமான வர்த்தகக் காப்பு நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாகவும் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

நேட்டோ படையணி, பருவநிலை மாறுதல் தடுப்பு, வர்த்தகம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா அளித்துவந்த ஒத்துழைப்பு, அறக்கொடை ஆகியவற்றைக் குறைத்துக்கொள்வதென்று ஏற்கெனவே ட்ரம்ப் முடிவு செய்துவிட்டார். இதனால் ஒருவித பதற்றமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே ஹாம்பர்க் நகரிலும் ட்ரம்ப், புதினை எதிர்ப்பவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஜி-20 போன்ற சர்வதேச அமைப்புகளின் மாநாடுகள் ஆண்டுதோறும் நடக்கின்றன. ஆனால், இது போன்ற மாநாடுகளில், வளரும் நாடுகளின் பிரச்சினையை வளர்ந்த நாடுகள் கருத்தில் கொள்வதில்லை என்பதுதான் தொடரும் துயரமாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வளர்ந்த நாடுகளுக்கு வளரும் நாடுகள் நிதியுதவியும் தொழில்நுட்ப உதவியும் செய்யும்போதுதான் இதுபோன்ற மாநாடுகள் அர்த்தமுள்ளவையாக மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x