Published : 10 Feb 2017 10:02 AM
Last Updated : 10 Feb 2017 10:02 AM

ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் இன்னும் உறுதி தேவை!

டெல்லியில் ஐக்கிய அரபு அமீரக இளவரசர் முஹம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடந்த சந்திப்பு, இந்தியா - அரபு அமீரகம் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல உதவும் என்ற எண்ணத்தை அளிக்கிறது. இரு தலைவர்களும் இப்படிச் சந்திப்பது கடந்த 18 மாதங்களில் மூன்றாவது முறை. ஒரு அரசின் தலைவராக இல்லையெனினும், அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தலைமைத் தளபதி பொறுப்பையும் வகிக்கும் இளவரசரை நம்முடைய குடியரசு தின அணிவகுப்பின் தலைமை விருந்தினராகப் பங்கேற்க அழைப்பு விடுத்தது, அரபு அமீரகத்துடனான உறவின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் இந்தியாவுக்குப் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. 50 பில்லியன் டாலர் வர்த்தக உறவு, எரிசக்தி என்பதையெல்லாம் தாண்டி, அந்நாட்டில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பையும் மையமாகக் கொண்டது அது. இந்நிலையில், வியூக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது, இளவரசரின் இந்திய வருகையின் முக்கிய அம்சம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் வரையறைகள் முடிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

கூட்டு ராணுவப் பயிற்சிகள், சாதனங்கள், உதிரி பாகங்களை இந்தியாவில் கூட்டாகத் தயாரிப்பது, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் ஆகியவை ஒப்பந்தத்தின் முக்கியமான விஷயங்கள். ‘ஒரு நாட்டின் ஆதரவுடன் நடத்தப்படும் பயங்கரவாதம்’எனும் கண்டிப்பான வார்த்தைகள் கூட்டறிக்கையில் இடம்பெற்றிருந்தன. பாகிஸ்தான் மண்ணிலிருந்து அரங்கேற்றப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இந்தியாவுக்கு இருக்கும் விரக்தியை அரபு அமீரகம் பகிர்ந்துகொள்கிறது எனும் செய்தி இதில் வெளிப்படுகிறது.

எனினும், நடவடிக்கைகளுக்கு வெறுமனே கண்டிப்பான வார்த்தைகள் மட்டும் மாற்றாக இருக்க முடியாது. அரபு அமீரகத்துடனான வியூக ஒத்துழைப்பு என்பது தெளிவான, உறுதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். தாவூத் இப்ராஹிம் நடத்தும் நிழல் உலக வணிகத்தை நிலைகுலையச் செய்வது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்படும் தாலிபான் உள்ளிட்ட குழுக்கள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்த நிதியில் கணிசமான தொகை ஐக்கிய அரபு அமீரகம் வழியாகக் கைமாற்றப்படுகிறது. அதேபோல, 500 பில்லியன் டாலர் மதிப்பில் இயங்கிவரும் உலகின் மிகப் பெரிய நிதி அமைப்பான அபுதாபி முதலீட்டு அமைப்பிலிருந்து, முதலீடுகளைப் பெறும் முயற்சிகளிலும் தீவிர நடவடிக்கைகள் வேண்டும். இரு தலைவர்களுக்கு இடையேயான உறவு, இரு நாட்டு உறவை மேலும் பல மடங்கு பலப்படுத்தத் தக்க வேலைகளில் நம்முடைய அரசு இறங்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x