

சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் மரணச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னையில் நகரின் மையப் பகுதியில், நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில், பட்டபகலில் நடந்த இளம் பெண் சுவாதி கொலை நாடு முழுவதும் பேசப்படும் சம்பவ மானது. காவல் துறை கடுமையான நெருக்கடிக்குள்ளான இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ராம்குமாரைக் கைதுசெய்து குற்றவாளியாக முன்னிறுத்தியது. ஆரம்பம் முதலே இந்த வழக்கில் ஏராளமான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவின.
காவல் துறை இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான பேச்சுகளையும் யூகங்களையும் கசியவிட்டது. சுவாதி கொலை நடந்த அடுத்த சில நாட்களில், இந்தச் சம்பவத்தில் இளைஞர் ஒருவருக்குத் தொடர்பு இருக்கிறது எனும் பொருள்பட நடிகர் ஒருவர் முகநூலில் பகிர்ந்த இன துவேஷப் பதிவு ஒரு உதாரணம். உண்மையில் அந்தச் சமயத்தில் காவல் துறை அதே போன்ற பெயரைக் கொண்ட சுவாதியின் நண்பர் ஒருவரை விசாரித்துவந்திருக்கிறது; அவர் இந்த வழக்கில் காவல் துறைக்கு உதவியிருக்கிறார் என்பது பின்னாளில் தெரிய வந்தது. இந்தத் தகவல் எப்படி காவல் துறையினரின் வழியின்றி வெளியே வந்திருக்க முடியும்?
காவல் துறையினர் ராம்குமாரைச் சுற்றி வளைத்த போதே, அவர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார் என்று சொன்ன காவல் துறைக்கு இடைப்பட்ட இந்தக் காலகட்டம் முழுவதும் அவர் எப்படியான மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்பதை உணர்வதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில், முக்கியத்துவம் மிக்க ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பவரைப் பாதுகாப்பதில் காவல் துறை எத்தனை அக்கறை காட்டியிருக்க வேண்டும்? அப்படியான எந்த அக்கறையும் முன் ஜாக்கிரதைச் செயல்பாடும் காவல் துறையினரிடம் இல்லை என்பதுதானே நாம் இதுவரை கேள்விப்படாத, வித்தியாசமான இந்தத் தற்கொலைச் செய்தியிலிருந்து தெரியவருகிறது?
தமிழகச் சிறைகள் பாதுகாப்பற்ற இடங்களாக, மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டவையாக மாறிவருவதைச் சமீபத்திய சம்பவங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன. சில நாட்களுக்கு முன்கூட ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் தாக்குதலுக்கு ஆளானார்.
ஒருவர் குற்றவாளி என்றானாலும்கூட அவருக்கான தண்டனையை வழங்க வேண்டியது நீதித் துறைதானே அன்றி அதற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. காவல் துறை எப்போது ஒருவரைக் கைதுசெய்கிறதோ அப்போதே அவருடைய உயிருக்குமான பொறுப்பாளி ஆகிவிடுகிறது. ராம்குமார் மரணம் எந்த வகையில் நிகழ்ந்திருந்தாலும் காவல் / சிறைத் துறை அதற்கான பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. ராம்குமாரோடு இந்த வழக்கு மண்ணுக்குப் போக அனுமதிக்க முடியாது. இது தொடர்பிலான அத்தனை பேரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!