

நாடு முழுவதும் ஒரே விதமான சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை வேண்டும் என்று இந்திய அரசு எடுத்துவந்த நீண்ட நாள் முயற்சி கைகூடியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களைக் கடந்து வந்த யோசனை இது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திருத்த மசோதா மக்களவையிலும் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும். பிறகு, நாட்டின் பெரும்பாலான சட்டப் பேரவைகளும் இதை ஏற்று ஒப்புதல் அளித்த பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாகும்.
நாடாளுமன்றத்தில் அதிலும் குறிப்பாக, மாநிலங்களவையில் இதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு நிகழ்ச்சி. இதற்கு ஒரு கட்சி மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. காங்கிரஸும் பாஜகவும் தங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளைக் குறைத்துக்கொண்டதால் இந்தத் தீர்வு சாத்தியமாயிற்று. பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அது காட்டிய பிடிவாதத்தைக் கைவிட்டிருந்தால் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வரிவிதிப்பு முறையை நோக்கி நாம் நகர்ந்திருக்க முடியும். அதேபோல, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுட்டிக்காட்டிய திருத்தங்களை இன்றைய ஆளுங்கட்சியான பாஜக ஏற்றுக்கொண்டதும் வரவேற்கத்தக்கது.
பொது சரக்கு, சேவை வரி காரணமாக, பொதுவான தேசியச் சந்தை உருவாகிறது. ஏராளமான வரி அடுக்குகள் கரைந்துபோக வழியேற்பட்டிருக்கிறது. இனி நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பொருட்கள் மற்றும் சேவைகளில் விலை அல்லது கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த மசோதா காரணமாக மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பெருமளவுக்கு மாற்றமடைகிறது. சொல்லப்போனால், மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரம் சுருங்குகிறது. இதனால்தான் தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தது. 2017 ஏப்ரல் முதல் இது அமலுக்கு வர வேண்டும் என்றால் மத்திய அரசால் மாநில அரசுகள், அரசு உருவாக்கவுள்ள பொதுச் சரக்கு, சேவை வரி பேரவை ஆகியவை கால அட்டவணை நியமித்துக்கொண்டு விரைந்து செயல்பட வேண்டும். அடுத்த கட்டமாக மத்திய அரசு வசூலிக்கப்படவுள்ள பொது சரக்கு, சேவை வரி மற்றும் மாநில அரசுகள் வசூலிக்கவுள்ள பொது சரக்கு, சேவை வரி தொடர்பான சட்டங்களைப் பிழையில்லாமல் தயாரிக்க வேண்டும். பிறகு, அவற்றை முறையே நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவையில் புதிய மசோதாவின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீதான விவாதத்தைத் தவிர்க்கும் வகையில், இதைப் பண மசோதாவாக அரசு கொண்டுவந்து நிறைவேற்றக் கூடும் என்ற பேச்சுகள் விரும்பத் தக்கதல்ல.
இது போன்ற முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருகையில் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளைத் தாண்டி மாநிலக் கட்சிகளிடத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்கிக் கொண்டுவர வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிகபட்ச வரி விகிதம் 18%-க்கு மேல் போகக்கூடாது என்று நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நாட்டில் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான சூழலைக் கொண்டுவருதல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடவும் முக்கியமானது, மத்திய அரசு தனக்கு இணையான பங்காளிகளாக மாநிலங்களின் உரிமைகளைக் கருதுவதாகும்!