

சிறிய அமைச்சரவையுடன் ‘குறைவான அரசு, நிறைவான நிர்வாகம்’ என்ற தாரக மந்திரத்தோடு மோடி ஆட்சியமைத்ததை நாம் மறந்துவிட முடியாது. ஆட்சிக்கு வந்த 5 மாதத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
புதிதாக அமைச்சரவையில் சேர்ந்திருக்கும் 21 பேரோடு சேர்த்து அமைச்சரவையின் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது அமைச்சரவையின் அளவை அல்ல, அமைச்சரவைக்கு எந்த அளவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான்.
உண்மையில், அமைச்சர்களுக்கான பணிகள், இலக்குகள், வழிமுறைகள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்திலிருந்தே அறிவிக்கப்படுகின்றன. பிரதமரின் அலுவலகத்தில் இருக்கும் மூத்த அதிகாரிகள் அனைத்துத் துறைச் செயலர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு செயல்படுகின்றனர்.
எல்லா துறைகளிலும் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பிரதமரின் செயலகம் தொடர்ந்து கண் காணிக்கிறது. அமைச்சர்களுக்காகச் சேர்த்து பிரதமரும் பிரதமர் அலுவலகமும் சிந்தித்தால், பின் அமைச்சரவைதான் எதற்காக?
இரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். முதலாவதாக, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கொள்கை இறுதி செய்யப்பட்டு, அதை வெளியிடும் நேரம்வரை அந்தத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு ஏதும் தெரியாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இரண்டாவதாக, திறன் வளர்ப்பு தொடர்பான கூட்டத்துக்கு மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை தாங்கிக்கொண்டிருந்தபோது அத்துறை இளைஞர் நலத் துறையின் கீழ் மாற்றப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறிய பிறகே அவருக்கு அந்தத் தகவல் தெரியும் என்ற விஷயம் கசிந்திருக்கிறது. அமைச்சரவை என்பது பாவனைக்காகத்தான் என்பதையும், மோடிதான் தனிநபர் அமைச்சரவை என்பதையும்தான் இந்தத் தகவல்கள் உணர்த்துகின்றன. மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி ஒருவர் மட்டுமே போதும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேலி செய்திருப்பது இந்தப் பின்னணியில்தான்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மத்திய அரசுக்கு மேஜை, நாற்காலிகள் தவிர, வேறு எதுவும் கிடையாது என்ற நிலையில், நிர்வாகத்தைத் தொடங்கி மிகக் குறைந்த அமைச்சர்களைக் கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்ற ஜவாஹர்லால் நேருவை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிய வில்லை. முதல் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் திறமைமிக்க தலைவர்கள் படேல், அபுல் கலாம் ஆஸாத் போன்றோர் மட்டுமல்ல, காங்கிரஸைத் தீவிரமாக எதிர்த்த அம்பேத்கர், ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்றோரும் இருந்தார்கள். திறமை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை அது. விழுந்து கிடந்த இந்தியாவைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தவர்களும், கூட்டுப் பங்களிப்பின் தாத்பரியத்தை நமக்கு உணர்த்தியவர்களும் அவர்கள்தான்.
இந்திரா காந்தியின் ஆட்சி முறையை நோக்கி மோடி நகர்ந்து கொண்டிருக்கிறாரோ என்பதே பலருடைய ஐயமும்.
120 கோடி மக்களுக்காக ஒருவர் மட்டுமே செயல்படுவதோ, சிந்திப்பதோ இயலாத காரியம். சரியானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதே திறமையான நிர்வாகியின் அடையாளம். கூட்டுப் பொறுப்புதான் நிர்வாகத்தின் இலக்கணம். அமைச்சருடைய அதிகாரங்களைப் பறித்துக்கொண்டு, அமைச்சரவையை மட்டும் விரிவாக்கம் செய்வதால் என்ன பலன் இருக்க முடியும்?