

மும்பையில் மசகான் கப்பல் கட்டும் துறையில், இந்தியக் கடற்படைக்காகக் கட்டப்படும் ஸ்கார்பீன் ரக அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக ஆயிரக்கணக்கான பக்கங்களில் இடம்பெற்றுள்ள ரகசியத் தகவல்கள் கசிந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரகசியங்கள் எப்படிக் கசிந்தன என்பதை விரைவாகவும் திறமையாகவும் விசாரித்தே தீர வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகள், ரகசியம் கசிந்தது அமைப்புரீதியாகவா, அல்லது ஆட்களால் கசிந்ததா என்பன போன்ற கேள்விகளுக்கு விரைவில் விடை தேடியாக வேண்டும்.
அதிகார வர்க்கம் இந்த விசாரணையைத் தாமதப்படுத்தவோ, திசைதிருப்பவோ அனுமதிக்கவே கூடாது. தவறு செய்தவர்களை அவர்கள் பாதுகாக்கவும் அனுமதித்துவிடக் கூடாது. 1,500 டன் எடையுள்ள இந்த ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடியது. கப்பலைப் பற்றிய தொழில்நுட்பத் தகவல்கள் மட்டும் 22,400 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளதிலிருந்தே, இது எவ்வளவு பெரிய போர்க் கப்பல் என்பது தெரிகிறது. ஆயுதங்களைப் பயன்படுத்தவும் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் நம்முடைய தாக்குதல்களை ஒருமுகப்படுத்தவும் இதில் ஏராளமான நுணுக்கங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ‘தி ஆஸ்திரேலியன்’ என்ற ஆஸ்திரேலிய நாளிதழ், இந்த ரகசியங்களை அச்சிட்டு அம்பலப்படுத்தியிருக்கிறது.
டி.சி.என்.எஸ். என்ற பிரெஞ்சு நிறுவனம், இந்த நீர்மூழ்கியை வடிவமைத்திருக்கிறது. நீர்மூழ்கியின் காந்த, மின்காந்த, அகச் சிவப்புக் கதிர் உள்ளடக்கங்கள் பற்றிய தரவுகள் அம்பலமாகியிருக்கின்றன. நீருக்குள் ஏவுகணைகளை ஏவும் திறன், தாக்குதலுக்கான வசதிகள் போன்றவையும் இதில் அடக்கம். விசாரணை நடந்து முடியும் வரையில் இதனால் ஏற்பட்ட பாதிப்பை ஊகிக்கவோ, கணிக்கவோ முடியாது. இதை நிபுணர்கள் விசாரிப்பது ஒருபுறம் இருந்தாலும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்த இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிப்பதும் பதற்றத்தைத் தணிக்க உதவும்.
2005-ல் பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தப்படி வாங்கிய 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான தொழில்நுட்பத் தரவுகள் அம்பலமாகியிருக்கின்றன. சுமார் ரூ. 25,000 கோடி மதிப்புள்ளது இந்தக் கொள்முதல். அப்போது, இந்தப் பேரம்தான் இந்தியாவின் மிகப் பெரிய ராணுவக் கொள்முதல். இந்தியக் கடற்படைக்கு மிகப் பெரிய பலத்தை அளிப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அடுத்த சில தசாப்தங்களுக்கு இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள்தான் மிகப் பெரிய பலமாக இருக்கப்போகின்றன. அணு ஏவுகணைகளை ஏவுவது உட்பட பல்வேறு பணிகளுக்குப் பயன்படக்கூடியவை என்பது இந்த நீர்மூழ்கிகளின் கூடுதல் சிறப்பு. இந்நிலையில், இந்த நீர்மூழ்கியின் ரகசியங்கள் கசிந்திருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
இப்படிப்பட்ட நிலையில், ரகசியங்கள் கசிவு தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகமும், கடற்படைத் தலைமையகமும் அளித்திருக்கும் விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை. ரகசியங்கள் எங்கிருந்து கசிந்திருந்தாலும் அதில் ஈடுபட்டவர்கள் யார், அவர்களுடைய பின்னணி என்ன என்பது கட்டாயம் தெரிந்தாக வேண்டும். ரகசியங்கள் அம்பலமாகிவிட்டதால் இவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டியது அவசியம். மிக முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை நாம் பாதுகாப்பதில் உள்ள குறைகளையும் ஆராய வேண்டும். பிரான்ஸிலிருந்தே ரகசியங்கள் கசிந்திருந்தால், அதற்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதுடன் உரிய வகையில் இழப்பீட்டையும் பெற வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் அரசு அதிகக் கவனம் செலுத்தினால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும்!